சென்னை: ஆளுநரால் பணி நீட்டிப்பு செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலை. துணை வேந்தர் ஜெகநாதனை உடனடியாக பணி நீக்கம் செய்ய பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;
பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் (08.04.2025) தமிழ்நாடு அரசு எதிர்- தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புரையை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. அதனோடு இவ்வழக்கில் சமரசமின்றி வாதுரைத்த தமிழக அரசினை எமது சங்கம் மனமார வாழ்த்துகிறது. பாராட்டுகிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புரையின்படி. (The Tamil Nadu Universities Laws (Amendment) Act, 2022) Amendments to Periyar University Act, 1997, தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நாளன்றே சட்டமாகிவிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.
மேற்படி தீர்ப்புரையின்படி, பெரியார் பல்கலைக்கழகச் சட்டம். 1997-இல், பிரிவு 12(A) Removal of Vice-Chancellor சேர்க்கப்பட்டு. நடைமுறைச் சட்டப் பிரிவாகியுள்ளது. புதியதாக சேர்க்கப்பட்டுள்ள 12(A)-இன் கீழ் தமிழகஅரசு மேற்படி சட்டப்பிரிவின்படி, சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இரா. ஜெகநாதனை உரிய முறையில் கீழ்க்கண்ட காரணங்களுக்காக உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனப் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் தமிழக அரசைக் கனிவுடன் கேட்டுக்கொள்கின்றது.
பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கம், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அரசுக்கு அனுப்பப்பட்ட புகார்களின் அடிப்படையில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமி ஜெகநாதன், பதிவாளர் குட்டியண்ணன் தங்கவேல், ஆட்சிக்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் பணி நியமனங்களிலும், ஊழல்கள், இதர முறைகேடுகளையும் விசாரிக்க அரசாணை (டி) எண். 4 உயர்கல்வி (கே1) துறை, நாள்.09.01.2023 மூலம் அப்போதைய உயர்கல்வித் துறை கூடுதல் செயலாளர் சு. பழனிச்சாமியை விசாரணை அலுவலராக நியமனம் செய்து ஊழல்கள், பணிநியமன முறைகேடுகள், அதிகார மீறல்கள் மற்றும் பணிநியமனத்தில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமை குறித்து விசராணை செய்து அரசுக்கு அறிக்கைச் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
அரசாணையின்படி 30.01.2023, 06.03.2023, 27.04.2023 மற்றும் 29.05.2023 ஆகிய நாட்களில் விசாரணை நடத்தப்பட்டு விசாரணை அறிக்கையானது க. பழனிச்சாமியால் அரசுக்கு 05.02.2024 அன்று சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இவ்விசாரணை அறிக்கையின்படி அப்போதைய பொறுப்புப் பதிவாளர் குட்டியண்ணன் தங்கவேல், தமிழ்த்துறை தலைவர் தி. பெரியசாமி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாயின என்றும் நூலகர் ம. ஜெயப்பிரகாஷ் மற்றும் உடற்கல்வி இயக்குநர் வெங்கடாச்சலம் ஆகியோரின் பணிநியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றும் இந்நிய மனங்கள் சட்டப்படி செல்லாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மேற்படி சு. பழனிச்சாமி அறிக்கையின்படி, உயர்கல்வித் துறை செயலாளர் தமது கடித எண். 21, நாள். 27.02.2024 . 76/01/2023 . 27.02.2024, மூலம் அப்போதைய பதிவாளர் குட்டியண்ணன் தங்கவேலுவை ஓய்வு பெற அனுமதிக்கக்கூடாது என்றும் தற்காலிகப் பணிநீக்கம் உடனடியாகச் செய்யப்பட வேண்டுமென்றும் துணைவேந்தர் இராமசாமி ஜெகநாதனுக்கு இருமுறை உத்தரவிட்டார்.
துணைவேந்தர் இராமசாமி ஜெகநாதன் அரசுக் கடிதத்தை கொஞ்சம் கூட மதிக்காமல் 29.02.2024 அன்று குட்டியண்ணன் தங்கவேலுவை பணி ஓய்வு பெற அனுமதித்து, பெரியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு 07.06.2024 அன்று நிறைவேற்றிய தீர்மானத்திற்கு நேர் ஏதிராக அவருக்கு இலட்சக்கணக்கான ஓய்வூதியப் பணப் பலன்களை வழங்கியதின் மூலம் அரசுக்குப் பெரும் நிதியிழப்பை ஏற்படுத்திடும் நோக்கில் செயல்பட்டுள்ளார் என்பது ஊர்ஜிதமாகின்றது.
மேலும் இராமசாமி ஜெகநாதன் ஆளுநர் R. N. ரவியுடன் கை கோர்த்து ABVP சார்புடைய ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கதிரேசனுடன் இணைந்து தொழிற்சங்க உறுப்பினர்கள் 78 பேர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஒழுங்கு நடவழக்கை எடுத்து வருகிறார். மேற்படி இராமசாமி ஜெகநாதன் தனது மூன்றான்டுக்கால பணிக்காலம் முடிந்தபின்னர் ஆளுநர் R.N. ரவியின் ஆதாவோடு ஓரான்டுகாலம் பணி நீட்டிப்பில் உள்ளார். இவரது பணிநீட்டிப்பு 19.05.2025ல் முடியவுள்ளது. இதற்குள் இவர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கப் பெருமுயற்சி எடுத்து வருகிறார்.
மேலே சொன்ன சங்கதிகளோடு கூடவே இராமசாமி ஜெகநாதன், குட்டியண்ணன் தங்கவேல், செங்கான் சதிஷ் மற்றும் ஏகாம்பரம் ராம் கணேஷ் என்பவர்கள் மீது சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் முதல் தகவலறிக்கை குற்ற எண் 1003/26.12.2023 ஆகப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. குட்டியண்ணன் தங்கவேல் மற்றும் செங்கான் சதிஷ் மீது இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் ஆட்சிக்குழு எடுக்கவில்லை. இராமசாமி ஜெகநாதன் மீதும் ஆட்சிக்குழுவோ, தமிழக அரசோ இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில் தற்போது உள்ள பெரியார் பல்கலைக்கழகச் சட்டப்பிரிவு 12(A) இன் கீழ் துணைவேந்தர் இராமசாமி ஜெகநாதனைப் பணிநீக்கம் செய்ய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
The post சேலம் பெரியார் பல்கலை. துணை வேந்தர் ஜெகநாதனை உடனடியாக பணி நீக்கம் செய்ய பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை appeared first on Dinakaran.