
சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி (60 வயது). உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் தனியாக வசித்து வந்தார். அவரது மகள் கலைச்செல்வி என்பவர் அவரை பராமரித்து வந்தார். தினமும் உணவு வழங்குவது, தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை செய்துவிட்டு கலைச்செல்வி அவரது இல்லத்திற்கு சென்று விடுவார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல உணவு கொடுத்துவிட்டு கலைச்செல்வி சென்றுள்ளார். பின்னர் காலையில் வந்து பார்த்தபோது, அவரது தாய் தீயில் எரிந்து சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி, இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அன்னலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த அன்னலட்சுமிக்கு மின்விசிறி உள்ளிட்டவைகளை ஆன் செய்வதற்கு வசதியாக அவருக்கு அருகில் சுவிட்ச் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுவிட்சை ஆன் செய்யும்போது மின்சாரம் தாக்கி தீப்பிடித்து உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்து எரிக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.