
குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பொழியும். இதமான தென்றல் காற்று தொடர்ந்து வீசும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் அவ்வப்போது பெய்யும் சாரல் காரணமாக மரங்களும், தாவரங்களும் பசுமையாக காணப்படும்.
குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.இந்த அருவிகளில் குளிப்பதால் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்து இரவும் பகலுமாக குளித்து வருகின்றனர்.
இந்நிலையில் குற்றாலத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று காலையில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தற்காலிகமாக தடை விதித்தனர்.
ஆனாலும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சீராக விழுவதால் சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவியில் தொடர்ந்து குளித்து வருகின்றனர். மெயின் அருவியில் தண்ணீரின் வரத்து சற்று குறைந்த உடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் மதியம் மெயின் அருவியில் வெள்ளம் குறைந்ததால் குளிக்க அனுமதித்தனர். இதையடுத்து மெயின் அருவியிலும் குளித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.