
தமிழகத்திற்கு வரவேண்டிய செமி கண்டக்டர் தொழிற்சாலை உ.பி.க்கு சென்றுவிட்டதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2025-2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் எனும் ஐந்தாண்டுத் திட்டம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும், உலக அளவில் தலைசிறந்த செமி கண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுப் புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் வடிவமைப்பு மையங்களை தமிழ்நாட்டில் அமைத்திட ஊக்கம் அளிக்கப்படும் என்றும், கோவை சூலூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் தலா நூறு ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திரத் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தச் சூழ்நிலையில், அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆறாவது செமி கண்டக்டர் தொழிற்சாலையை உத்தரப் பிரதேச மாநிலம், ஜீவர் பகுதியில் 3,706 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொழிற்சாலை 2027 ஆம் ஆண்டு உற்பத்தியை துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீரழிவு, தொழில் துவங்குவதில் பிற மாநிலங்களுக்கு இணையாக சலுகைகள் வழங்காதது, தொழில் துவங்குவதற்கான அனுமதியை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள், மத்திய அரசுடன் இணக்கமான போக்கினைக் கடைபிடிக்காதது போன்றவற்றின் காரணமாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் பிற மாநிலங்களுக்கு செல்கிறதோ என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
ஏற்கெனவே, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான கேரியர் குளோபல் நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்டு தன்னுடைய முதல் தொழிற்சாலையை இங்கு அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அந்த நிறுவனம் 1000 கோடி ரூபாயை ஆந்திராவில் முதலீடு செய்துள்ளது. இதேபோன்று, எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஆந்திர மாநில அரசின் துரித நடவடிக்கை காரணமாக அங்கு 5,000 கோடி ரூபாய் முதலீடு அங்கு சென்றுவிட்டது. இது தவிர ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய செமி கண்டக்டர் தொழிற்சாலை உத்தரப் பிரதேசத்திற்கு சென்றுவிட்டது என்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது. இதன் விளைவாக, அரசாங்கத்திற்கு வர வேண்டிய வருவாய் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை தமிழகம் இழந்திருக்கிறது.
தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த செமி கண்டக்டர் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும், அதன்மூலம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.