சேலத்துக்காரர் டீம் மேல் சீற்றத்துடன் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 months ago 20

‘‘சொகுசு கார் புக்கிங் விவகாரத்தில் சிக்கலில் மாட்டி இருக்கிறதாமே விஐபி தரப்பு..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் சில வாரங்களுக்கு முன்பு ரூ.1.5 கோடியில் சொகுசு கார் வாங்கிய விவகாரம் பூதாகரமாயிருக்கு.. இதில் பொறியியல் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் செல்போன் எண் மற்றும் அவரது அலுவலக இ-மெயில் முகவரி குறிப்பிடப்பட்டிருந்ததுதான் சர்ச்சைக்கு காரணமாம்.. இந்த விவகாரம் அடங்குவதற்குள் மேலும் ஒரு சொகுசு கார் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்காம்… அதாவது நகர பகுதிக்குள் ரெஸ்ட்டோ பார் மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய விஐபிக்கு நெருக்கமான அந்த நபர் ரூ.6 கோடி மதிப்பு கொண்ட காரை புக்கிங் செய்துள்ளதோடு அதை அவரே பதிவு செய்துள்ள விவகாரமும் மற்றொரு சர்ச்சையை கிளப்பியிருக்கு… ஒரு சாதாரண தொழிலதிபருக்கு இத்தனை கோடி மதிப்பிலான சொகுசு கார் வாங்குவதற்கு எப்படி பணம் வந்தது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐடி, ஈடி துறைகளுக்கும் ரகசிய புகார்கள் பறந்து இருக்காம்.. இதனால் எந்த நேரத்திலும் இத்துறைகள் புதுச்சேரிக்குள் மீண்டும் களமிறங்கலாம் என்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம் கார் புக்கிங் செய்த நபர் மட்டுமின்றி அவருக்கு திரைமறைவில் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள விஐபி தரப்பும்.. இதுதான் புதுச்சேரியில் தற்போதைய ஹைலெட்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சீண்டி பார்க்க வேண்டாம் என சேலத்துக்காரரின் டீமுக்கு எச்சரிக்கை விட மாஜி அமைச்சர் தயாராயிட்டாராமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர் மோசடி வழக்கில் சிக்கி இருப்பதால் சேலத்துக்காரர் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.. சேலத்துக்காரர் மீது மாஜி அமைச்சர் கடும் கோபத்தில் இருந்து வருவதோடு ‘கப்சிப்’ ஆயிட்டாராம்… சேலத்துக்காரருக்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்கலாம் என்ற யோசனையில் மாஜி அமைச்சர் ‘கப்சிப்பாக’ இருந்து வருவது நிர்வாகிகளுக்கு பின்னர் தெரியவந்ததாம். இதனால் நிர்வாகிகளும் அதையே கடைபிடிக்க ஆரம்பித்து விட்டார்களாம்… இந்த தகவலை சேலத்துக்காரர் கவனத்துக்கு மூத்த நிர்வாகிகள் கொண்டு சென்றாங்களாம்… சேலத்துக்காரரும் சம்பந்தப்பட்ட மாஜி அமைச்சரிடம் இதுபற்றி பேச தயங்கி வருகிறதாம்… ஆனாலும், இதுபற்றி பேசாமல் இருக்க முடியாது என்பதால், சேலத்துக்காரரின் டீம் மூலம் பேச ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.. இந்த தகவல் தெரிய வந்த மாஜி அமைச்சர், தன்னை சீண்டி பார்க்க வேண்டாம்னு அவர்களுக்கு நேரிடையாகவே எச்சரிக்கை விட தயாராயிட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பங்குச்சந்தை முதலீட்டில் சிக்கி சர்ச்சையான புதுமை அதிகாரிபற்றி தான் ஊர்முழுக்க பேச்சாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது சகஜமாகி வருகிறது. சமீபத்தில் 2 அதிகாரிக்கு எதிரான போராட்டம் வெடித்து ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு அதிகாரி புதிய சர்ச்சையில் சிக்கியிருப்பது அரசியல் களத்தையே அதிர வைத்துள்ளதாம்.. சமூகத்தின் நலன்சார்ந்த துறையில் அதிகாரியான, கேயன் முடியும் பெயர் கொண்ட அவர் விதிமீறலில் ஈடுபட்டு கொம்யூனில் ஆணையர் பதவியை பிடித்ததாக ஏற்கனவே புகார் இருக்காம்.. நிலைமை இப்படியிருக்க சமீபத்தில் போலி பங்குச் சந்தை இணையதளம் மூலம் 75 லட்சத்தை இழந்துள்ளதாக சைபர் க்ரைமில் துணிச்சலாக புகார் அளித்ததுதான் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியிருக்கு.. என்ஓசி உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுகள் இந்த அதிகாரி மீது உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய அதிகாரியான இவர் பங்குசந்தையில் இவ்வளவு பணத்தை எப்படி முதலீடு செய்தார், இதற்காக யாரிடம் அனுமதி பெற்றார், இவ்வளவு பணம் அவருக்கு எப்படி வந்தது என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை பாமர மக்களும் எழுப்புகின்றனர். இது ஒருபுறமிருக்க, புல்லட்சாமிக்கும், அவருக்கு நெருக்கமான ஒரு அமைச்சருக்கும் உறவினரான முன்னாள் எம்எல்ஏ பணமும் பங்குச்சந்தை சுவாகாவில் அடங்கியிருப்பதாக வெளியாகும் தகவலும் புரியாத புதிர்தான். தற்போதைக்கு புதுச்சேரியில் இந்த சர்ச்சையான புதுமை அதிகாரி பற்றிதான் ஊர்முழுக்க அரசல் புரசலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடைகோடி மாவட்ட காவல் நிலையம் ஒன்றில் பெண் அதிகாரிங்களுக்குள் ஏற்பட்ட முட்டல் மோதல் சர்ச்சையாகி இடமாறுதல் வரை போயிட்டாமே…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தின் தலைநகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பெண் எஸ்ஐ, பெண் இன்ஸ்பெக்டர் இடையே இருந்து வந்த மோதலில், புதியதாக வந்த எஸ்எஸ்ஐயை இன்ஸ்பெக்டர் எஸ்ஐ ஆக பாவித்துள்ளார். அவரே தனக்கு எல்லா வகையிலும் சரியான கீழ் அதிகாரியாக இருப்பார் என்று ‘கணக்குபோட்ட’ இன்ஸ்பெக்டர் எஸ்ஐயை கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அவமதிப்பு செய்துள்ளார். எஸ்ஐ அறையில் உள்ள அவரது இருக்கையில் எஸ்எஸ்ஐயை அமர வைத்து பணிபுரிய வைத்துள்ளாராம்.. உச்சகட்டத்தில் மோதல் வெடிக்க, எனக்கு இந்த பணியே வேண்டாம்னு எஸ்ஐ காவல்துறை தலைமைக்கு ராஜினாமா கடிதம் எழுதிட அது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகியது.. உடனே எஸ்.பி, இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்திருக்கிறாரு.. பல காவல்நிலையங்களில் இதுதான் நிலை என்றாலும் கணவன்-மனைவி இருவரும் ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் சூழலில் அதில் ஒருவர் உயர் பதவியில் அமர்ந்து இருக்கும்போது அதனை வைத்து மிரட்டாமல் மிரட்டியே பல அதிகாரிகளும் தங்கள் பணியிடங்களில் நினைத்ததை சாதித்துக்கொள்கிறார்களாம்.. இங்கும் அதிகார போக்கிற்கு அதுவும் ஒரு காரணம் என்கிறது காக்கி வட்டாரம்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post சேலத்துக்காரர் டீம் மேல் சீற்றத்துடன் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article