சேலம்,
சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அய்யாசாமி பசுமை பூங்காவில் பல ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றை பாதுகாக்கும் நோக்கில், வவ்வால்களை பாதிக்காத விதத்தில் தீபாவளியைக் கொண்டாட அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதன்படி சுமார் 5,000 குடும்பங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சுற்றுச்சூழலுக்கு வவ்வால்கள் செய்யும் நன்மை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதோடு தீபாவளிக்கு அதிக ஒளி எழுப்பக்கூடிய வெடிகளை வெடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், வவ்வால்களை பாதுகாக்க அங்குள்ள கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
இதே போல், வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட காமாட்சியம்மன் பேட்டையைச் சேர்ந்த மக்கள், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர். அங்குள்ள பழமை வாய்ந்த 5 புளியமரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசிப்பதாகவும், அவற்றை பாதுகாக்கவே தீபாவளி மட்டுமின்றி, எந்தவொரு நிகழ்வுக்கும் தங்கள் பகுதியில் பட்டாசு வெடிப்பதில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.