பந்தலூர் : பந்தலூர் அருகே கூடலூர் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கு பணி ஆணைகள், உரிய பயனாளிகளுக்கு சேரம்பாடி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாயக்கூடத்தில் நேற்று வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சி தமிழகத்தில் மிகப்பெரிய ஊராட்சியாக இருந்து வருகிறது. 15 வார்டுகள் கொண்ட ஊராட்சியில் 14 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சியில் அன்றாட கூலி தொழிலாளிகள், தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், சிறுகுறு விவசாயிகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் ஊராட்சி பகுதியில் ஏற்கனவே 300 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் 369 வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் நேற்று முதற்கட்டமாக 300 வீடுகளுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முன்னதாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்று பேசினார். கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பணி உத்தரவை வழங்கி பேசுகையில், ‘‘மழைக்காலம் துவங்க இருப்பதால் பணி ஆணை வழங்கப்பட்டவர்கள் உடனடியாக வீடுகள் கட்டும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்து அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவரவர் வங்கி கணக்கில் படிப்படியாக தொகை வரவு வைக்கப்படும். ஒரு வீடு கட்டுவதற்கு தொகை ரூ.3.50 லட்சம் அரசு வழங்கும்’’ என்றார். நிகழ்ச்சியில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சர்மிளா, ஊராட்சி செயலாளர் சோனி ஷாஜி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
The post சேரங்கோடு ஊராட்சியில் 300 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்ட பணி ஆணை appeared first on Dinakaran.