சேத்துப்பட்டு சிறப்பு எஸ்ஐ மீது வழக்குப்பதிவு * லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி நடவடிக்கை * மனைவி மற்றும் மாமியார் மீதும் வழக்குப் பாய்ந்தது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு

1 week ago 1

திருவண்ணாமலை, பிப்.1: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சேத்துப்பட்டு சிறப்பு எஸ்ஐ மற்றும் அவரது மனைவி, மாமியார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ராட்டிணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் ஆனந்தன்(51). சேத்துப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரிகிறார். கடந்த 1993ல் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்த இவர், ஆரணி, சந்தவாசல், பெரணமல்லூர் போலீஸ் ஸ்டேஷன்களில் நீணடகாலமாக தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், சிறப்பு எஸ்ஐ ஆனந்தன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, ஓய்வுபெற்ற எஸ்ஐ ஒருவர் கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் அளித்தார். அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். மேலும், சிறப்பு எஸ்ஐ ஆனந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள், சொத்து விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, ஆனந்தன், அவரது மனைவி நதியா, மாமியார் லோகநாயகி ஆகியோரின் கடந்த 2010ம் ஆண்டு வங்கிக்கணக்கு இருப்பு மற்றும் சொத்து மதிப்பு ₹3.70 லட்சமாக இருந்தது. 2015ம் ஆண்டில் ₹67.64 லட்சமாக உயர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சொத்து மதிப்பு உயர்ந்த காலத்தில், ஆரணி மற்றும் சந்தவாசலில், தனிப்பிரிவு ஏட்டாக ஆனந்தன் பணிபுரிந்துள்ளார். மேலும், அவரது வருமானத்தை கணக்கிட்டதில், சுமார் 133 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த வருமானம் எப்படி வந்தது என்பதற்கான எந்த ஆதாரமும் இலலை என தெரிகிறது. இந்நிலையில், சிறப்பு எஸ்ஐ ஆனந்தன், அவரது மனைவி நதியா, மாமியார் லோகநாயகி ஆகியோர் மீது, அரசு ஊழியர் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் எப்படி வந்தது என்பது குறித்து உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக, போலீஸ் சிறப்பு எஸ்ஐ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்ைப ஏற்படுத்தியிருக்கிறது.

The post சேத்துப்பட்டு சிறப்பு எஸ்ஐ மீது வழக்குப்பதிவு * லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி நடவடிக்கை * மனைவி மற்றும் மாமியார் மீதும் வழக்குப் பாய்ந்தது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article