செவ்வாய் தோஷமா..? பயம் வேண்டாம்

6 hours ago 3

ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், ஜாதகம் பார்த்து தங்களின் கிரக நிலைக்கு ஏற்ற நல்ல நேரத்தில் சுப காரியங்களை செய்வது வழக்கம். குறிப்பாக திருமணத்திற்காக ஜாதகம் பார்க்கும்போது பெயர் பொருத்தம், ஜாதக பொருத்தம், எதிர்கால வாழ்க்கை, குழந்தைப்பேறு, குடும்ப உறவுகள் என அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்வார்கள். இதில் முக்கிய அம்சமாக செவ்வாய் தோஷம் இருக்கிறதா? என்று கேட்டு தெளிவுபெற்று அதன் அடிப்படையில் வரனை முடிவு செய்வது வழக்கம்.

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

ஜாதகத்தில் எந்தெந்த இடத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம்? என்பது பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஜாதகத்தில் லக்னத்திற்கு 2-வது இடம் குடும்ப ஸ்தானம் மற்றும் தனஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் 4-வது இடம் சுக ஸ்தானம், 7-வது இடம் களத்திர ஸ்தானம், 8-வது இடம் மாங்கல்ய ஸ்தானம், 12-வது இடம் படுக்கை ஸ்தானம் எனப்படுகிறது. இந்த இடங்களில் எதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் எனப்படும். இந்த இடங்களில் அமர்ந்த செவ்வாய், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவார். 7 மற்றும் 8-ம் இடத்து செவ்வாய், கடுமையான தோஷத்தை உண்டாக்கும் என்றும், மற்ற 2, 4, 12-ம் இடத்து செவ்வாய் மிதமான தோஷத்தை ஏற்படுத்தும் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

விதிவிலக்கு

இந்த இடங்களில் செவ்வாய் தோஷம் இருந்தாலும், ஜாதகப்படி இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு. அதாவது, இந்த ஸ்தானங்களில் மேஷ ராசியாகவோ, மகர ராசியாகவோ, கடக ராசியாகவோ, விருச்சிக ராசியாகவோ இருந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகிறது. அதாவது 2, 4, 7, 8, 12-ம் வீடுகளில் செவ்வாய் ஆட்சியாகவோ, உச்சமாகவோ, நீச்சமாகவோ இருந்தால் தோஷம் இல்லை. இது முக்கியமான விதிவிலக்கு ஆகும்.

விருச்சிக ராசியாக இருந்தால் செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார். அதனால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை. மேஷ ராசியாக இருந்தாலும் அங்கே செவ்வாய் ஆட்சி பெறுகிறார். அங்கும் செவ்வாய் தோஷம் இல்லை. கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெறுவதால் அங்கேயும் செவ்வாய் தோஷம் இல்லை. மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெறுவதால் அங்கு செவ்வாய் தோஷம் இல்லை.

செவ்வாய் என்றாலே ரத்த காரகன். தாம்பத்திய சுகத்திற்கு முக்கிய கிரகம் செவ்வாய்தான். எனவே, திருமண பொருத்தம் பார்க்கும்போது செவ்வாய் தோஷத்தை கவனிப்பது வழக்கம். செவ்வாயின் பலம் சமமாக இருந்தால்தான் தம்பதியரிடையே தாம்பத்யம் மற்றும் அன்யோன்யம் நன்றாக இருக்கும்.

பாதிப்பு

தம்பதியரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, இன்னொருவருக்கு தோஷம் இல்லை என்றால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இருவரும் அன்யோன்யமாக அன்பாக இருந்தாலும்கூட, செவ்வாய் தோஷம், தசா புத்திகள் இருந்தால் பெரிய சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உடல்நல பாதிப்பு ஏற்படலாம், விபத்தில் சிக்க நேரிடலாம்.

சிலருக்கு கடுமையான செவ்வாய் தோஷம் இருக்கும். இந்த தோஷம் தம்பதியரில் ஒருவருக்கு இருந்து இன்னொருவருக்கு இல்லாவிட்டால் கணவன்-மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வரலாம்.

பரிகாரம்

செவ்வாய் தோஷம் என்றாலே அனைவருக்கும் பயம் ஏற்படும். செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதம் ஆகும். திருமணத்தில் சில தடைகளை ஏற்படுத்தும். செவ்வாய் தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்காது என்பது பொதுவான கருத்து. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு. தோஷங்கள் என்றால் அதற்கு பரிகாரங்களும் நிச்சயம் உள்ளன. எனவே, செவ்வாய் தோஷத்தை கண்டு அச்சப்பட தேவையில்லை. சரியான பரிகாரத்தின் மூலம் நிவர்த்தி செய்யலாம். ராசிகளில் தோஷம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப பஞ்சபூதங்களின் அடிப்படையில் பரிகாரங்களை செய்யலாம்.

செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகப்பெருமான். எனவே, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும்.

சிவப்பு நிற மலர்கள், உதாரணமாக ரோஜா, அரளி போன்ற மலர்களை செவ்வாய் பகவான் மற்றும் முருகப்பெருமானுக்கு சாற்றி வழிபடலாம். முருகப்பெருமானுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி நைவேத்தியம் செய்ய செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும்.

வரும்முன் காப்போம்

அதேசமயம், வரும்முன் காப்பதே மேல் என்பதற்கு ஏற்ப, திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்கள், ஜாதகத்தை பார்த்து கணித்து பொருத்தமான வரனை தேர்ந்தெடுப்பது சிறந்தது. செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷத்தைச் சேர்ப்பதுதான் நல்லது என்பார்கள். அதாவது, தாம்பத்தியத்திற்கு அதிபதியான செவ்வாய் சம பலம் பெறும்போது, கணவன்-மனைவி இருவருமே விட்டுக்கொடுத்து குடும்பம் நடத்துவதற்கான சூழல் உருவாகிறது. இருவரும் கருத்தொற்றுமையுடன் அன்யோன்யமாக இருப்பதால் வீண் பிரச்சினைகள் ஏற்படாது.

Read Entire Article