
சென்னை,
இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்குபவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற 'கண்பேசும் வார்த்தைகள்' , 'கனா காணும் காலங்கள்' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. 19 ஆண்டுகளுக்கு பிறகு '7ஜி ரெயின்போ காலனி' 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் நடைபெற்று வருகிறது.. முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே 2-ம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா 2-ம் பாகத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.
புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2-ம் பாகம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தினை ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். ராம்ஜி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே சத்தமே இல்லாமல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின்பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
'7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக செல்வராகவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இப்படத்தின் 2ம் பாகத்தில் யுவன் இசையில் பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் ஒரு பாடல் பாடியுள்ளதாக இயக்குநர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தை தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.