திருவனந்தபுரம்,
கேரளாவின் பாலக்காட்டில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில், செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளியில் செல்போன் கொண்டு போன பிளஸ் 1 மாணவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த ஆசிரியர் அதனை பள்ளி முதல்வரிடம் தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, முதல்வர் அறைக்கு வரும்படி மாணவருக்கு அறிவுறுத்தப்பட்டது. பள்ளி முதல்வர், அந்த மாணவனிடம் செல்போன் வேண்டுமென்றால் பெற்றோரை அழைத்து வா என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் முதல்வரை நோக்கி கத்தி கூச்சலிட்டு உள்ளார். அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மாணவன், ஒரு கட்டத்தில் ஆசிரியரை கொலை செய்து விடுவேன் என்றும் எச்சரித்து உள்ளார்.
இதனை கூடியிருந்த ஆசிரியர்களில் ஒருவர் அவருடைய செல்போனில் படம் பிடித்து கொண்டார். அதனை பள்ளி நிர்வாகம் மற்றும் அந்த மாணவனின் பெற்றோருக்கு அனுப்பினார்.
இந்நிலையில், அந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனினும், மாணவரை திருத்த முயற்சிக்காத அந்த பள்ளியையே பலரும் பரவலாக விமர்சித்தனர்.
இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என கேரள பள்ளி கல்வி மந்திரி சிவன் குட்டி கூறியுள்ளார். வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை என பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த மாணவனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாணவருக்கு ஆலோசனை வழங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அந்த மாணவரும் பள்ளி அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.