சென்னை: செர்பியா செல்ல உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு செலவீன தொகையாக ரூ.15 லட்சத்திற்கான காசோலையினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் உலகின் எந்த பகுதியில் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டியிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை ஆரம்பித்து நிதி உதவி வழங்கி வருகின்றார்கள்.
இதன் காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் விளையாட்டு வீரர்களின் தேவை அடிப்படையில், 16 கோடியே 56 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி உதவி பெற்ற வீரர்கள் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 100 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்கள். செர்பியா நாட்டில் நாளை முதல் ஏப்.14 வரை சர்வதேச பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான -ஜிம்னாசியாட் 2025 போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் டேக்வாண்டா, நடனம் ஆகிய பிரிவுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், செர்பியா நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் ஜிம்னாசியாட் 2025 போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விமான பயண கட்டணம், தங்குவதற்கான செலவுகள், போட்டியில் பங்கேற்பதற்கான கட்டணம், விசா கட்டணம், காப்பீட்டு கட்டணம், உணவுக்கான செலவுகள் என ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ. 2.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.15 லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து வழங்கினார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார்.
போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதி உதவி தேவைப்படும் விளையாட்டு வீரர்கள் www.tnchampions.sdat.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post செர்பியா செல்ல உள்ள தமிழக வீரர்கள் 6 பேருக்கு ரூ.15 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.