செரப்பணஞ்சேரி ஊராட்சியில் வீடுகளுக்கு கதவு எண் பதிப்பதற்கு கட்டாய வசூல்: பொதுமக்கள் புகார்

4 months ago 12

ஸ்ரீபெரும்புதூர்: செரப்பணஞ்சேரி ஊராட்சியில் வீடுகளில் ஒட்டப்படும் கதவு எண்ணிற்காக, வீட்டின் உரிமையாளர்களிடம் ரூ.50 வசூலிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். குன்றத்தூர் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. அந்தந்த ஊராட்சி கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வீடுகளுக்கு கதவு எண் தகடுகள் பொருத்தப்படுவது வழக்கம். தற்போது, முதல் கட்டமாக செரப்பணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் கதவுகளின் முன் பகுதியில், வார்டு எண் மற்றும் வீட்டு எண் அச்சடிக்கப்பட்ட இரும்பாலான தகடுகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இதனை பொருத்த வரும் ஊழியர்கள், வீட்டு உரிமையாளர்களிடம், எவ்வித ரசிதும் வழங்காமல் கட்டாயமாக ரூ.50 வசூல் செய்து வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இங்குள்ள பெரும்பாலான வீடுகளுக்கு, தகடுகள் பொருத்திய நிலையில், கட்டணம் வசூலிப்பது குறித்த மக்கள் சிலர் கேள்வி எழுப்பியதால், எண் பதிக்காமல் ஊழியர்கள் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்து. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு; வீட்டு உரிமையாளர்களிடமிருந்து தகடுகள் பொருத்துவதற்கு, பணம் வசூலிப்பதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை. இந்த தகடுகள் பொருத்துவதற்கு, ஒப்பந்தம் கோரப்பட்டு, ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து மட்டுமே பணம் வசூலிக்கப்படுவது விதிமுறை. அப்படி மீறி வசூல் செய்யும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post செரப்பணஞ்சேரி ஊராட்சியில் வீடுகளுக்கு கதவு எண் பதிப்பதற்கு கட்டாய வசூல்: பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article