செய்யாறு : செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டாரம் தென்னம்பட்டு கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் நுண்ணீர் பாசன அலகுகள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.
வட்டார தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி தலைமை தாங்கினார். வேளாண் பொறியியல் துறை சார்ந்த ஷேக் முகையதீன் முன்னிலை வகித்தார். நுண்ணீர் பாசன நிறுவனத்தை சார்ந்த விஜய் மழைத்துவான் மற்றும் தெளிப்பு நீர் கருவிகளை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தி விவசாயிகளின் வயல்களில் நுண்ணீர் பாசனம் அமைத்தல், நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு தேவையான ஆவணங்கள், சிறு குரு விவசாய சான்றுகள் பெறுதல், நுண்ணீர் பாசனம் அமைத்த வயல்களில் நுண்ணுயிர் பாசன கருவிகளை சரி செய்தல் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
தொடர்ந்து சுற்றுச்சூழல் இணக்கம் தொடர்பான செயல்பாடுகள் குறித்து தென்னம்பட்டு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வெம்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ரேணுகா தேவி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திகழ்மதி பொறியியல் துறை அலுவலர் ஷேக் மொகைதீன், ஆத்மா அலுவலர்கள் கங்காதரன், பத்மஸ்ரீ ஆகியோர் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்கான கடமையும் வழிமுறைகளையும் குறித்து உரையாற்றினார்.
மாணவர்களிடையே சுற்றுச்சூழலுடன் விவசாயத்துடன் நட்புறவு கொள்ளும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மாணவர்களிடையே வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நட்டு வளர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பிரகாஷ், சத்தியமூர்த்தி, விவசாயிகள் கலந்துகொண்டனர்.
The post செய்யாறு அருகே விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன பயிற்சி appeared first on Dinakaran.