*கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள்
செய்யாறு : பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, குத்தனூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 174 பயனாளிகளுக்கு ₹1 கோடி 10 லட்சத்து 40 ஆயிரத்து 675 மதிப்பில் வருவாய்த் துறை, வேளாண் துறை, வட்ட வழங்கல், சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:
குழந்தை திருமணங்கள் முற்றிலும் தவிர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முழு முயற்சி எடுத்து வருகிறது. குழந்தை திருமணம் செய்யப்படுவதால் மனதளவிலும் உடலளவிலும் வலிமை இருக்காது. எனவே அடுத்த தலைமுறை நன்றாக வளர நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். பெண்களுக்கு கல்வி அவசியம்.
ஒரு பெண் கல்வி கற்றhல் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் எப்போதும் முன்னேற்றத்தையே தரும். மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் நவீன காலத்திற்கு ஏற்றார்போல் கிரீன் போர்டு, டிஜிட்டல் வகுப்பறைகளாக பராமரிக்கப்படுகிறது. தேவையான அளவிற்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது.
பிளாஸ்டிக் கழிவை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது. விலங்கினங்கள், மனிதர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு பல்வேறு நோய் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்க பொதுமக்களாகிய நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் கேரி பேக்குகளை தவிர்த்து கைப்பையை பயன்படுத்த வேண்டும்.
தமிழக அரசு ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதிக்கும் வகையில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டு உண்மையான பயனாளிகள் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்ட ஸ்டால்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். பின்னர் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளின் பெற்றோர்களிடம் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். நொறுக்கு தீனிகளை தருவதை தவிர்க்க வேண்டும். புரதச்சத்துள்ள உணவுகளையும் பழங்களையும் வழங்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளிடம் செல்போன் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டாம் என அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சப்- கலெக்டர் பல்லவி வர்மா, தாசில்தார் துளசிராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வாகனன், வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ரேணுகாதேவி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராஜூ, திமுக ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், தினகரன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி நலத்தலைவர் கருணாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பெருமாள் நன்றி கூறினார்.
The post செய்யாறு அருகே சிறப்பு மனுநீதி நாள் முகாம் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.