செய்யாறு அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 2 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: டாக்டர்கள் சாதனை

3 weeks ago 7

செய்யாறு, அக்.21: செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒரே நாளில் 2 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, தென் எலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர், கடந்த 6 மாதங்களாக வலது முழங்கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து, செய்யாறில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த எலும்பு மருத்துவர் சந்திரன், முதியவருக்கு மூட்டு தேய்மானம் அடைந்திருப்பதை கண்டறிந்தார். இதற்காக முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினார்.

அதேபோல், செய்யாறு தாலுகா, மேட்டு அனுப்பத்துறையை சேர்ந்த 42 வயதுடையவருக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு வலது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நடக்க முடியாமல் தவித்துள்ளார். இதையடுத்து அவரை உறவினர்கள் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு மருத்துவர் சந்திரன் பரிசோதித்தபோது வலது இடுப்பு எலும்பில் ரத்த ஓட்டம் முற்றிலும் நின்று செயலிழந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

அதன்பேரில், பாதிக்கப்பட்ட இருவருக்கும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மலர்விழி, செய்யாறு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவர் பாண்டியன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி எலும்பு மருத்துவர்கள் சந்திரன், விமல்ராஜ், மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் பிரியா, செவிலியர்கள் தயாசேகரி, கீதா தனலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 18ம் தேதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் இருவரும் மருத்துவ கண்காணிப்பில் நலமாக உள்ளதாக எலும்பு மருத்துவர் சந்திரன் தெரிவித்துள்ளார்.

The post செய்யாறு அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 2 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: டாக்டர்கள் சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article