ஆற்காடு-திண்டிவனம் சாலை விரிவாக்கம் செய்யாறு-வந்தவாசி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

2 hours ago 2

*ஏடிஎஸ்பி தலைமையில் 240 போலீசார் பாதுகாப்பு

செய்யாறு : ஆற்காடு- திண்டிவனம் சாலை விரிவாக்கம் காரணமாக செய்யாறு-வந்தவாசி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.முதலமைச்சரின் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ஆற்காடு-திண்டிவனம் சாலை ரூ.90 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கல்லூரி முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலை வரை சாலை விரிவாக்க பணிகள், சிறுபாலங்கள், மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.

அதன்படி வந்தவாசி சாலையில் செய்யாறு ஞானமுருகன்பூண்டி ரவுண்டானா அருகிலும், அனக்காவூர் பிடிஓ அலுவலகம் அருகிலும் நெடுஞ்சாலையில் உள்ள 2 கான்கிரீட் வீடு உட்பட 71 வீடுகள், ஒரு மசூதி, வள்ளலார் கோயில், பச்சையம்மன், முருகர் சிலைகள் அகற்ற திட்டமிடப்பட்டது.

இதற்காக 3 மாதத்திற்கு முன் குடியிருப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மாற்று இடம் கேட்டு வருவாய்துறையிடம் கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டம் நடத்திவந்தனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து மாற்று இடம் வழங்கிய பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும்படி கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் வழங்கி காலக்கெடு முடிந்த நிலையில் 2 வாரங்களாகியும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் சில தினங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் வீடு வீடாக சென்று ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ளுமாறு வருவாய்துறையினர் கூறியிருந்தனர்.

ஆனால் இதுவரை அகற்றவில்லை.இந்நிலையில் திட்டமிட்டபடி நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்துறையினர், போலீசார் முன்னிலையில் ஞானமுருகன்பூண்டி ரவுண்டானா பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். 10க்கும் மேற்பட்ட ஜேசிபிக்கள் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

இங்கு திருவண்ணாமலை மாவட்ட ஏடிஸ்பி அண்ணாதுரை, டிஎஸ்பிக்கள் சண்முகவேலன், மனோகரன், சுரேஷ்சண்முகம், முருகன், ரவிச்சந்திரன் மற்றும் 8 இன்ஸ்பெக்டர்கள், 42 எஸ்ஐக்கள் உட்பட 240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வருவாய்துறையினர், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி பொறியாளர் உதயகுமார், உதவி கோட்ட பொறியாளர் நாராயணன் சாலை பணியாளர்கள், நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மாற்று இடம் கேட்டு விண்ணப்பித்தவர்களில், வருவாய்துறையினர் மூலம் உரிய பரிசீலனை செய்யப்பட்டு முதற்கட்டமாக 66 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

The post ஆற்காடு-திண்டிவனம் சாலை விரிவாக்கம் செய்யாறு-வந்தவாசி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article