ஐதராபாத்,
நடிகர் மோகன் பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நடிகர் மோகன்பாபுவுக்கும் மகன் மனோஜ் மஞ்ஜுவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருவரும் மாறி மாறி தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த புதன் கிழமையன்று(11.12.2024) மனோஜ் மஞ்சு, மோகன் பாபு வீட்டிற்குள் சில ஆட்களுடன் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால். மோகன் பாபு வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படைபோலீசார் அதனை முறியடித்தனர்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்களை, மைக்கை வைத்து மோகன் பாபு தாக்கினார். இதில் காயமடைந்த 2 செய்தியாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தெலுங்கானா பத்திரிகையாளர் சங்கம் போலீசில் புகார் அளித்தது. அதனைத்தொடர்ந்து, நடிகர் மோகன் பாபு மீது தெலுங்கானா போலீசார் 118 பிஎன்எஸ் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இதனிடையே உயர் ரத்த அழுத்தம் காரணமாக கடந்த புதன் கிழமையன்று(11.12.2024) மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் செய்தியாளர்களை தாக்கி விவகாரத்தில் நடிகர் மோகன் பாபு மன்னிப்பு கேட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை முறையாக எடுத்துரைக்கவும், நடந்த சம்பவங்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தனிப்பட்ட குடும்பத் தகராறாக ஆரம்பித்தது, ஒரு பெரிய சூழ்நிலையில் சுழன்றது, மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் சங்கத்திற்கு மட்டுமல்ல, பத்திரிகை சகோதரத்துவத்திற்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
உங்களின் பொறுமையை பாராட்டி இந்த கடிதத்தை அனுப்புகிறேன். இந்த நேரத்தில், எனது வீட்டின் கேட்டை உடைத்து சிலர் ஆட்களுடன் நுழைய முயன்ற போது, நான் அமைதியை இழந்தேன். இந்த குழப்பத்தின் மத்தியில், பத்திரிகை ஊடகங்கள் எதிர்பாராத சூழ்நிலையில் பின்னிப்பிணைந்தன. நான் நிலைமையை சமாளிப்பதற்கு முயற்சித்தபோது, பத்திரிகையாளர் ரஞ்சித், துரதிர்ஷ்டவசமாக படுகாயம் அடைந்தார்.
இது மிகவும் வருந்தத்த கூடியது, மேலும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். ரஞ்சித் மற்றும் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், அவர்கள் விரைவில் குணமடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.