சென்னை: செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ரூ.3.60 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பூலித்தேவன் படைத் தளபதி வெண்ணி காலாடி மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலி ஆகியோரது சிலைகள், தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் சிலை மற்றும் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் தென்காசி மாவட்டம், விசுவநாதப்பேரியில் வெண்ணி காலாடிக்கு 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளது.
வீராங்கனை வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி, மெய் முழுதும் எரியெண்ணெயைத் தடவிக் கொண்டு வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்து அழித்துத் தியாகச் சுடராகி சிவகங்கை வெற்றிக்கு வழிவகுத்தார். சிவகங்கை வட்டம், ராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் குயிலித்தாய்க்கு 50 லட்சம் ரூபாய் செலவில் சிலை நிறுவப்பட்டுள்ளது. தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர். அவரிடம் வரி கேட்டு வந்த அந்திரை கேதிஷ் என்ற ஆங்கிலேயத் தளபதியைப் பிடித்துத் தூக்கிலிட்டுப் பழிக்குப்பழி வாங்கினார்.
அவரது வீரத்தை போற்றி 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கரின் சிலையையும், தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் நினைவு அரங்கத்தையும் முதல்வர் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், இயக்குநர் வைத்திநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ரூ.3.60 கோடியில் வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் வெண்ணி காலாடி, குயிலிக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.