சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் 8வது லீக் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 8வது லீக் போட்டி சென்னையில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் பில் சால்ட், விராட் கோஹ்லி களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான துவக்கத்தை தந்து 45 ரன் சேர்த்திருந்த நிலையில், நுார் அகமது வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தில் பில் சால்ட்டை (32 ரன்), தோனி ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். பின் வந்த தேவ்தத் படிக்கல் (27), அஸ்வின் பந்தில் ருதுராஜிடம் கேட்ச் தந்து வெளியேறினார். இதையடுத்து, கேப்டன் ரஜத் படிதார் உள்வந்தார். சிறிதுநேரத்தில் விராட் கோஹ்லி (31 ரன்) அவுட்டானார். அதன்பின், லிவிங்ஸ்டோன் (10 ரன்), ஜிதேஷ் சர்மா (12), படிதார்(51 ரன்) அவுட்டாகினர்.
20 ஓவர் முடிவில், பெங்களூரு, 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. சென்னை தரப்பில் நுார் அஹமது 3, பதிரனா 2, அஸ்வின், கலீல் அஹமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களமிறங்கியது. அதையடுத்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களமிறங்கியது. ஆரம்பம் முதலே சொதப்பலாக ஆடிய சென்னை அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவர் முடிவில் சென்னை 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்தது. அதனால் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் ஹேசில்வுட் அதிகபட்சமாக 4 ஓவரில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தயால். லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
* 0.17 நொடியில் ஸ்டம்ப்பிங் மீண்டும் அசத்திய தோனி
மும்பையுடனான ஐபிஎல் போட்டியில் சூர்யகுமார் யாதவை, சென்னை அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் தோனி, 0.12 நொடிகளில் ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கி சாதனை படைத்திருந்தார். அதேபோன்ற சாதனையை பெங்களூரு அணியுடனான போட்டியிலும் தோனி நிகழ்த்தி உள்ளார். பெங்களூரு அணியின் பில் சால்ட் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தபோது, நுார் அஹமது வீசிய பந்தை ஏறி அடிக்க முயன்ற பில் சால்ட் தவற விட்டார். அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய தோனி, மின்னல் வேகத்தில் பந்தை பிடித்து ஸ்டம்ப்பிங் செய்து அவுட்டாக்கினார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நொடிகள், 0.17. தோனியிடம், 43 வயதானாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கும் திறமை சற்றும் குறையாதது, ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post சென்னையுடன் ஐபிஎல் லீக் போட்டி பெங்களூரு அணி அபார வெற்றி appeared first on Dinakaran.