* சென்னையில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க 9 இடங்கள் தேர்வு
* மெரினாவில் ரோப் கார் சாத்தியக்கூறு அறிக்கை தயாராகிறது: மேயர் பிரியா தகவல்
சென்னை: சென்னையில் சாலையோர கடைகளை முறைப்படுத்தும் விதமாக 15 மண்டலங்களிலும் நகர விற்பனை குழு அமைக்க சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சென்னையில் 9 இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க இடங்களை தேர்வு செய்தும், மெரினாவில் ரோப் கார் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளன. சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் மாதந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில், துணைமேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தில் போது கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பேசினர். அதற்கு மேயர் பிரியா பதில் அளித்தார்.
அதன்படி, கேள்வி நேரத்தின் போது 104- வார்டு திமுக கவுன்சிலர் செம்ழொழி பேசுவையில், ”சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார வாகனங்கள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு தேவையான சார்ஜிங் பாயின்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுத்த வேண்டும் என்றார். மேலும் தமிழக அரசும் சுற்றுச்சூழல் கருதி மின்சார பேருந்துகளையும் வாங்கியுள்ளது. ஆகையால் இதில் பொது மக்களுக்கு இலவசமாக சார்ஜிங் செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும் ஒரு யூனிட்டுக்கு 5 முதல் 9 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக 500 சதுரடி வீட்டில் வசிக்கும் ஒருவருக்கு சார்ஜிங் செய்ய வசதியில்லாத நிலை உள்ளது. இவர்களைப் போன்றவர்கள் பயன்படுத்தும் வகையில் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, சென்னையில் 15 மண்டலங்களில் தலா ஒன்று என்ற அடிப்படையில் சார்ஜிங் பாயின்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டு இது தொடர்பான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதில் இலவசமாக சார்ஜிங் செய்ய வாய்ப்பு இல்லை என்றார். தொடர்ந்து பேசிய 104 வார்டு திமுக கவுன்சிலர் செம்மொழி ‘‘சென்னையின் புகழ்பெற்ற மெரினாவில் ரோப் கார் வசதி வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த மேயர் பிரியா, மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி குறித்து சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என சென்னை மேயர் பிரியா கூறினார்.
இதனை தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் 35 வது வார்டு மதிமுக கவுன்சிலர் ஜீவன்பேசியதாவது: ரூ15ஆயிரம் கட்டணத்தில் புதிதாக குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்ற இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் போராட வேண்டியுள்ளது. மேலும் எனது வீடு உட்பட பல இடங்களில் குடிநீரில் கழிவு நீரும் சேர்ந்தே வருகிறது. குடிநீர் வாரியத்தின் சார்பில் ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொள்ளும் போது சாலைகள் வெட்டுகின்றனர், இதனை மாநகராட்சி உதவி பொறியாளர் உட்பட அதிகாரிகள் கேட்டால் கூட உரிய பதில் அளிக்காமல் அடிக்க பாய்கிறார்.
குடிநீர் வாரியத்தின் சார்பில் ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொள்ளும் போது சாலைகள் வெட்டுகின்றனர், இதனை மாநகராட்சி உதவி பொறியாளர் உட்பட அதிகாரிகள் கேட்டால் கூட உரிய பதில் அளிக்க மறுக்கின்றனர். இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா ‘‘ இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்தில்கேட்கப்பட்டு அடுத்த கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்றார். இதன் பின்னர், பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் வார்டு சார்ந்த குறைகளையும், நிறைகளையும் கூட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் மொத்தம் 135 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
அதில் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* கூட்டத்தில் சாலையோர கடைகளை முறைப்படுத்தும் நோக்கத்தில் 15 மண்டலங்களிலும் நகர விற்பனை குழு அமைக்கப்படும். பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளில் இருந்து தேர்தல் மூலம் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்தல் நடத்துவதற்கான தேதி, நேரம் மற்றும் இடத்தை நிர்ணயம் செய்து அறிவிக்கை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டது.
* சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு சிலை நிறுவுவதற்கு தடையின்மை சான்று வழங்க தீர்மானிக்கப்பட்டது.
* சென்னையில் இயங்கக்கூடிய மின்சார வாகனங்களை சார்ஜிங் செய்ய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், மால்கள், பூங்காக்கள் விளையாட்டு மைதானங்களில் சார்ஜிங் வசதியை ஏற்படுத்த ஆய்வு செய்யப்பட்டன.
* பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் செய்யும் நிலையம் 9 இடங்களில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
* அஷ்டலட்சுமி கோவில், பெசன்ட் நகர் கடற்கரை மெரினா கடற்கரை மங்கள் ஏரி பூங்கா, 133 வது வார்டு மாநகராட்சி விளையாட்டு மைதானம், சோமசுந்தரம் மைதானம், செம்மொழிப் பூங்கா பார்க்கிங்,
* அண்ணா நகர் பௌக்கேன் வில்லா பூங்கா, மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா ஆகிய இடங்களில் சார்ஜிங் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* ஓட்டேரி சுடுகாடு அமைந்துள்ள புரசைவாக்கம் பிரிக்ளின் சாலைக்கு தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சாலை என பெயர் மாற்றம் செய்வதற்கு அனுமதி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகளிருக்கு பயிற்சி வழங்க ரூ.7.50 கோடி ஒதுக்கீடு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மகளிருக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திறன் மேம்பாட்டு பயிற்சிகளான டெய்லரிங் பயிற்சி ஆரி கலை, அழகுக்கலை, மற்றும் Tally கணினி வகுப்பு இலவசமாக வழங்குவதற்கு அனுமதி அளித்து மண்டலத்திற்கு 50 லட்சம் வீதம் 15 மண்டலங்களுக்கும் 7.50 கோடி தொகையில் செலவு செய்ய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் சாலையோர கடைகளை முறைப்படுத்த 15 மண்டலங்களிலும் நகர விற்பனை குழு அமைக்க முடிவு: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.