சென்னையில் காற்று மாசுவை தடுக்க அதிரடி; கட்டுமான கழிவுகளை விதிகளை மீறி கையாண்டால் ரூ.5 லட்சம் அபராதம் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

23 hours ago 4

சென்னை: சென்னை மாநகராட்சியின் ஏப்ரல் மாதத்திற்கான மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில், நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் முன்னிலை வகித்தனர். இதில், மொத்தம் 237 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சுமார் 6 ஆயிரத்து 150 மெட்ரிக் டன் அளவுக்கு திடக்கழிவுகள் உருவாக்கம் செய்யப்படுகிறது.

இதுதவிர, சுமார் 800 மெட்ரிக் டன் அளவுக்கு கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் உருவாகின்றன. இதை தடுக்க, சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன. காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் முக்கிய பொருட்களான தூசி கொண்ட துகள் போன்றவற்றை இந்த வழிகாட்டுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும்.

புதிய கட்டுமானம் அல்லது இடிக்கப்படும் அனைத்து கட்டமைப்புகளில் இருந்து வெளிவரும் தூசி துகள்கள் பரவுவதை தடுக்க அதிக அடர்த்தி கொண்ட துணி, தார்ப்பாய், இரட்டை அடுக்கு பச்சை வலையால் மூடப்பட்டிருக்க வேண்டும். காற்றில் தூசிகள் உருவாகும் பகுதிகளில் தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்து தூசி உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். இவைகள் உள்பட 18 வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்களுக்கு சதுர மீட்டர் பரப்பளவுக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். அந்த வகையில், 300 சதுர மீட்டர் முதல் 500 சதுர மீட்டர் பரப்பளவில் விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், 500 சதுர மீட்டர் முதல் 20 ஆயிரம் சதுர மீட்டர் வரையில் உள்ள விதிமீறல்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும்.

முதல்கட்டமாக, எச்சரிக்கை வழங்கப்படும். எச்சரிக்கை விடுக்கப்பட்ட 15 நாட்களுக்கு பிறகும் நடவடிக்கை இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகு, 7 நாட்களுக்கு சரி செய்யாவிட்டால், அபராதத்துடன் கூடுதலாக கட்டுமான நடவடிக்கைகள் நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஓட்டேரி நல்லா நீர்வழி கால்வாய் மற்றும் விருகம்பாக்கம் நீர்வழி கால்வாய், வீராங்கல் ஓடை நீர்வழி கால்வாய்கள் ஆகியவை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஓட்டேரி நல்லா நீர்வழி கால்வாய், விருகம்பாக்கம் நீர்வழி கால்வாய்களில் மழைநீர் தங்கு தடையின்றி சீராக செல்ல அவற்றை புனரமைக்கும் பணிக்கு தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை மதிப்பீடு தொகை ரூ.95 கோடிக்கு தமிழ்நாடு அரசின் நிர்வாக அனுமதி பெற கடிதம் எழுதுவதற்கான அனுமதி கேட்டு தீர்மானம் சமர்ப்பிக்கப்படுகிறது என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

The post சென்னையில் காற்று மாசுவை தடுக்க அதிரடி; கட்டுமான கழிவுகளை விதிகளை மீறி கையாண்டால் ரூ.5 லட்சம் அபராதம் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Read Entire Article