டெல்லி : பயங்கரவாதம் எங்கு இருந்தாலும் வேரோடு களையப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்பட தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அசாம் போடோ சமூக குலத்தலைவர் உபேந்திரநாத் பிரம்மா சிலையை திறந்து வைத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில்,’ பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய ஒவ்வொரு தீவிரவாதியையும் வேட்டையாடுவோம். அவர்கள் அனைவரும் இந்த கொடூரமான செயலுக்கு பதிலளிக்க வேண்டும். மோடி அரசு எந்த பயங்கரவாதியையும் விட்டுவைக்காது. பஹல்காமில் யார் கொடூரமான தாக்குதலை நடத்தியிருந்தாலும், நாங்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டோம்.
ஒவ்வொரு குற்றவாளியையும் நாங்கள் வேட்டையாடுவோம். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதன் மூலம் தப்பித்துவிடுவோம் என்று யாராவது நினைத்தால், அது தவறு. இது மோடியின் அரசு. நாங்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டோம். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டு 26 பேரை கொன்றதன் மூலம் நீங்கள் வெற்றி பெற்றதாக நினைக்காதீர்கள். உங்கள் ஒவ்வொருவரும் பதிலளிக்க வேண்டியவர்களாக மாற்றப்படுவீர்கள். நாட்டில் பயங்கரவாதம் அங்குலம் அங்குலமாக களையப்படும் என்பதை உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள், தெற்கு காஷ்மீரின் அடர்ந்த வனப்பகுதியில் தற்போதும் தங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வைத்திருப்பதால், சமைத்து சாப்பிட்டு தங்கி இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஏப்ரல் 15-ம் தேதி தீவிரவாதிகள் நான்கு இடங்களில் உளவு பார்த்து, பைசரன் பள்ளத்தாக்கை தேர்வு செய்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அரு பள்ளத்தாக்கு, உள்ளூர் பொழுதுபோக்கு பூங்கா, பெதாப் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகம் என்பதால், தாக்குதல் நடத்திவிட்டு எளிதில் தப்பிச் செல்ல பைசரன் பள்ளத்தாக்கை தேர்வு செய்துள்ளதும் அம்பலம் ஆகி உள்ளது.
The post பயங்கரவாதம் எங்கு இருந்தாலும் வேரோடு களையப்படும் : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரை!! appeared first on Dinakaran.