சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் வெளியீடு

3 weeks ago 3

சென்னை,

'கவிக்கோ' என்று அழைக்கப்படும் கவிஞரும், பேராசிரியருமான அப்துல் ரகுமான், தனது புதுக்கவிதைகள் மூலம் தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதித்தவர் ஆவார். 'ஆலாபனை' என்ற கவிதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். மதுரையில் 1937-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி பிறந்த அப்துல் ரகுமான், ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள், கவிதை தொகுப்புகள், பயணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவரது பணிகளை கவுரவிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இவர் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 முதல் 2011 வரை பணியாற்றியுள்ளார். பல்வேறு இளம் தலைமுறை கவிஞர்களுக்கு முன்னோடியாக விளங்கிய கவிக்கோ அப்துல் ரகுமான், 2017-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி மறைந்தார்.

இந்நிலையில், கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய ஆவணப்படம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இயக்குநர் பிருந்தா சாரதி உருவாக்கிய இந்த ஆவணப்படத்தை திரைப்பட இயக்குநர் லிங்குசாமி வெளியிட, சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி பாட்சா பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், பேச்சாளர் பர்வீன் சுல்தானா, கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article