சென்னையில் ஓர் அஷ்டலிங்கம்

2 hours ago 1

சிவபெருமானின் அருள் பெறுவதற்காக திருவண்ணாமலையில் கிரிவலம் வருவோர்கள் ஏராளம். ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் ஐப்பசி, கார்த்திகை, பௌர்ணமி ஆகிய நாள்களில் பக்தர்கள், கிரிவலம் வருவர். மலையைச் சுற்றி அஷ்டலிங்கம் உள்ளன. அருணாசலேஸ்வரர் உடன் அஷ்ட லிங்கமும் நமக்கு அருள்பாலிக்கும். சென்னையிலும், திருவேற்காடு வேதபுரீஸ்வரரை சுற்றி அஷ்டலிங்கங்கள் உள்ளன. பௌர்ணமி நாளில், நாம் இந்த அஷ்ட சிவ ஓட்டத்தைத் தரிசித்தோம் என்றால், நம் மனதில் ஏற்பட்டுள்ள சங்கடங்கள், துன்பங்கள், பிணிகள் அகன்று நல்லருள் கிடைக்கும். சிவ ஓட்டத்தை நாம் வரிசை முறைப்படிதான் வணங்கி, இறைவனை தரிசிக்க வேண்டும். பௌர்ணமி, அமாவாசை, ஞாயிறு, வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய நாட்களில், நாம் தரிசனம் செய்தோம் என்றால் சிறப்பான வாழ்வு அமையும்.

வேதபுரீஸ்வரர் ஆலயம்

குறுமுனிவரான அகத்தியர், உலகை சமநிலைப்படுத்த தென்திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். சிவ – பார்வதி திருமணத்தைக் காண மனம் விழைந்தது. சிவபெருமானை தியானித்து கல்யாணக் காட்சியைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டவுடன், கல்யாணக் கோலத்துடன் காட்சி தந்த இடம், இந்த இடமாகும். சிவபெருமான், தீவினை அகற்றுபவன். “சிவனை ஜீவனுள் வைத்துப் போற்று என்று திருமூலர்’’ கூறியுள்ளார்.

சிவனும், உமையவளும் எட்டு திக்குகளிலும் தனது திருமேனிகளை வெவ்வேறு பெயர்கள் கொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்த வேதநாயகனான சிவபெருமான், அழகிய கேசத்துடன் நான்கு திருக்கரத்துடன் காட்சியளிக்கிறார். வட வேதாரண்யம் என்று பக்தர்களால் கொண்டாடப்படும் இடம் இத்தலமே. வேதங்களே மரமாக இருக்கிறது. இம்மரத்திற்கு வெல், வேலமரம் என்று அழைக்கப்படுகின்றது. வாருங்கள், சிவ ஓட்டத்தை நாம் தரிசனம் செய்வோம்.

1) இந்திரலிங்கம் – ஞானாம்பிகை.
2) அக்னிலிங்கம் – ஆனந்த வள்ளி.
3) எமலிங்கம் – மரகதாம்பிகை.
4) நிருதிலிங்கம் – பாலாம்பிகை.
5) வருணலிங்கம். – ஜலகண்டீஸ்வரி.
6) வாயு லிங்கம் – விருத்தாம்பிகை.
7) குபேரலிங்கம் – வேம்புநாயகி.
8) ஈசான்யலிங்கம் – பார்வதி தேவி.

திருவண்ணாமலையில் ஈசன், உண்ணாமுலையுடன் நின்று மக்களுக்கு அருள் பார்வை பார்க்கிறார். அதேபோல், சென்னையில் உள்ள அஷ்டலிங்கத்தை சிவபெருமானோடு உமையவளும் துணையாக தம்பதி சமேதராக நின்று மக்களைப் பேணுகின்றாள். திருவேற்காடு வேதபுரீஸ்வரர் ஆலயத்திலிருந்து அஷ்டலிங்க சிவ ஓட்டம் துவங்குகின்றோம்.

1) இந்திரலிங்கம்

இந்திரலிங்கம் – ஞானாம்பிகை

இந்திரன், சுகபோக பிரியன். தேவலோகத்தில் இருந்து இத்தலத்தில் எழுந்தருளி ஈசனை வணங்கி பூஜித்ததால், இப்பெயர். தேவேந்திரன் பதவிக்கு ஆசை உடையவன். எப்பொழுதும் முனிவர்கள், ரிஷிகள் போன்றோர்கள் அதிகமாக வேள்விகள் செய்து தவமிருந்தால். அதை கெடுக்கக் கூடியவன். தான் தன்னுடைய பதவிக்கு கேடு வராமல் பாதுகாத்துக் கொள்பவனே இந்திரன். சிவபெருமானை தேவேந்திரனால் வழிபட்ட தலம் என்பதால், “இந்திர சேனாதீஸ்வரன்’’ என்ற பெயரோடு அருள்பாலிக்கிறார்.

வள்ளி கொல்லைமேடு என்ற இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் அஷ்ட திக்குகளில் நேர் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. இங்கு சென்று நாம் நெய்தீபம் ஏற்றி வழிபட்டோம் என்றால், நம்முடைய துன்பங்கள் அகலும்.

பல நன்மைகள் ஏற்பட்டாலும், முக்கியமாக நீதிமன்றம் வழக்கு, நிலுவையில் உள்ள பிரச்னைகள் யாவும் தடை விலகி பதவி உயர்வு, அரசாங்க வேலைகளில் வெற்றி தரும். உயர்ந்த நிலையை அடைய விரும்புவோர், இந்த தலத்திற்கு சென்று வழிபட்டு வந்தால், எண்ணியது ஈடேறும். இந்திரனின் யானையான ஐராவதம் செல்வத்தை வாரி வழங்கும். செல்வத்திற்கும் நமக்கு குறை இருக்காது. இத்தலத்தில் பயன் பெறும் ராசிகள் – ரிஷபம், துலாம்.

2) அக்னி லிங்கம்

அகத்தீஸ்வரர் – ஆனந்தவல்லி

அக்னி பகவான் வணங்கிய தலம், இத்தலம். இங்கே எம்பெருமான் உடைய ஆலயம் கஜபீஷ்ட வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனந்த வள்ளி தாயார், நெல்லிக்கனி வடிவில் அருள்பாலிக்கிறார். ஒரு சமயம் அகத்தியர், காசிக்கு சென்று வழிபட்டு திரும்பி அத்தலத்தில் எழுந்தருளினார். அப்பொழுது, இங்கு இருந்த மிகவும் பிரசித்தி பெற்ற அபூர்வமான நூம்பல் மலரைக் கொண்டு வந்தார். எங்குமே கிடைக்காத விசேஷ மலர் என்பதாலும், சிவபெருமானுக்கு அதிக பிரீத்தி உடைய மலர் ஆகும். இப்பூவினால் அர்ச்சனை செய்தார். ஆகையால் இத்தலம் மலரின் பெயரால் நூம்பல் என்று அழைக்கப்பட்டது. காடாக இருந்தபொழுது, இந்த கோயிலைச் சுற்றிலும் மரங்கள் அடர்ந்திருந்தன. மரங்களில் பாம்புகள் சாரை சாரையாக தொங்கிக்கொண்டிருக்கும்.

சுவாமியைக் காணச் செல்லும் பக்தர்கள், சிவபெருமானை பார்க்க வேண்டும் என்றால் அந்த பாம்புகளை அகற்றியே அவரை காண வேண்டும். ஆனால், யாருக்கும் எவ்விதமான தீங்கும் அந்த பாம்புகள் கொடுத்ததில்லை. இங்கு கால பைரவ சித்தர் என்பவர், தவமிருந்து சிவபெருமானை வணங்கி முத்தி அடைந்தார். இவருடைய ஜீவசமாதியும் இங்கு உள்ளது. மக்கள் இவரை வணங்கி அருளைப் பெற்றும் வருகின்றனர். அன்னாபிஷேகம் இந்த சிவலிங்கத்திற்கு நடைபெறுகின்றன. கால பைரவருக்கு தனி சந்நிதானம் உண்டு. காலபைரவரை மக்கள் வணங்கினர். அரிய செயல்களை எல்லாம் செய்து மக்களுடைய துயரைத் துடைத்து எறிந்தார். பூஜைகள் இடைவிடாமல் நடைபெறுகின்றது. மக்கள் இங்கு வந்து தாங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேற வேண்டும் என்று கால பைரவரிடம் வணங்கி நல்லாசி பெற்று எண்ணிய காரியங்களை தொடங்குகின்றனர்.

காஞ்சிப் பெரியவாள் இந்த தலத்தில் எழுந்தருளி, இந்த லிங்கத்தை வணங்கினார். மக்களும் நன்மை அடைய வேண்டும் என்று அவர் அகத்தீஸ்வர் ஆலயத்தில் தங்கி இருந்து பிரார்த்தித்துச் சென்றிருக்கிறார்.

இங்கிருக்கும் நவகிரகங்கள் தம்பதி

சகிதமாகத்தான் இருப்பார்கள். அவர்களை சுற்றி வரும் பொழுது, நம்முடைய கெட்ட நேரங்கள் அகன்று நல்ல வரமும், அருளும் கிடைக்கும்.
கொல்லைமேட்டில் இருந்து நூம்பல் வருவதற்கு அரை கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இங்கு அக்னி பகவான் வழிபட்டதனால் அக்னிக்கும், தேவேந்திரன் அழகு வேண்டும் என்று கேட்டதனால் அவருக்கு அழகும் வழங்கிய தலம்.

எனவே, நாம் மேனியை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றாலும், எண்ணிய காரியங்கள் நடைபெறவும் காலபைரவரை வழிபடுவது மிகவும் சிறந்தது. கங்கையை தரிசிக்க எண்ணுவோர், இந்த தலத்தில் நாம் வணங்கினோம் என்றால் மிகவும் சிறப்பாகும். எதிரிகள் தொல்லை, வழக்கு வெப்ப தொடர்பாக ஏற்படும் பிணிகள் அகலும்.

திசை – தென்கிழக்கு
ராசி – சிம்மம்

3) எமலிங்கம் கைலாசநாதர் மரகதாம்பிகை

நூம்பலில் இருந்து நாலரை கிலோமீட்டர் தூரத்தில் பூந்தமல்லி ஆவடி சாலையில் வலது பக்கமாக திரும்பினால் செந்நீர்க் குப்பம். இந்த இடத்தில்தான் இறைவன் காட்சி அளிக்கிறார். மரகதவல்லி தாயார் பச்சைக் கல்லில் இருப்பதால், இவளை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். எமபயம் நீங்குவதற்கு இது ஒரு சிறந்த தலமாகும். எமனே இங்கு எழுந்தருளி சிவபெருமானை வணங்கினார். நோயோடு வருபவர்களுக்கு பிணி தீர்க்கும் ஆலயமாகும். ஏழரைச் சனி, கண்டச் சனி, அஷ்டம சனி, பாத சனி மற்றும் சொத்து பிரச்னை, சம்பந்தப்பட்ட தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

திசை – தெற்கு திசை.
ராசி – விருச்சிகம்.

4) நிருதிலிங்கம் பாலீஸ்வரர் பாலாம்பிகை

நிர்கதியாக இருப்போருக்கு கரம் கொடுத்து அருள்பொழியும் தலம். நிராயுதபாணியாக நிற்பவருக்கு அருள் தரக்கூடிய கோயில். இந்தத் திருத்தலத்தில் இங்கே பாலாம்பிகை என்ற நாமத்தோடு பாலீஸ் வரன் துணையோடு மக்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோயில் சுமார் 2300 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டது. இந்த இடத்தில் நாம் நெய்தீபம் ஏற்றி இறைவனைச் சுற்றி வந்தோம் என்றால், நமக்கு வேண்டிய செல்வம் எல்லாம் நிரம்பி வழியும்.

ராசி- மேஷம்

5) வருண லிங்கம்

ஜலகண்டீஸ்வரர் – ஜலகண்டீஸ்வரி

சென்னீர் குப்பத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் பூந்தமல்லி ஆவடி சாலையில், மேட்டுப்பாளையம் என்று பாரிவாக்கம் இடத்தில் வனாந்தரத்தின் நடுவே கோயில்கொண்டுள்ளார். இவர் இருக்கும் தலம் சுற்றிலும் வயல்காடுகள். இங்கு சிவபெருமான், நீரிலே இருப்பார். இங்கே இருக்கக் கூடிய தாயாரானவள் ஜலகண்டீஸ்வரி. இந்த தலத்தைச் சுற்றிலும் அதிகமாக பைரவனுடைய வாகனமான நாய்கள் அதிகமாக இருக்கும்.

நாம் செல்லும் பொழுது இந்தப் பிராணிகளுக்கு சாப்பிட சிறு தீனியாக பிஸ்கட் வாங்கிச் சென்றால் மிகவும் நல்லது. இங்கு மனக்கவலையோடு வந்தவர்கள் அக்கவலை தீர்ந்து மகிழ்ச்சியோடு கைங்கரியப் பணியைச் செய்து தங்களுடைய வேண்டுகோளை இறைவன் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டு சென்று விடுகின்றனர். அடுத்த மூன்று பௌர்ணமி களில் அவர்களுடைய குறைநீங்கி, நிறைவு தந்த ஈசனுக்கு காணிக்கை செலுத்தி பக்தர்கள் செல்கிறார்கள்.

இங்கு அபூர்வமான நிகழ்வுகள் பல நடந்திருப்பதாக இந்த கோயில் பூசாரி கூறியிருக்கின்றார். சிவபெருமான் அருள் பாலிக்கும் திசை மேற்கு இங்கு விசேஷ ராசிகளான – மகர, கும்ப ராசிகள், நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் சிறந்த பலன்களை பெறலாம்.

(அடுத்த இதழில்…)

பொன்முகரியன்

The post சென்னையில் ஓர் அஷ்டலிங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article