சென்னை,
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நடைபெற்ற நிகழ்வில், சென்னையில் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜிடம் வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், ஏப்ரல் 2025-ல் நடைபெற உள்ள எவரெஸ்ட் எக்ஸ்பெடிஷனில் (எவெரெஸ்ட் பயணம்) கலந்து கொள்ள உள்ள தமிழ்நாடு வீரர் யு.ஆஷிஷ்-க்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும், தோஹாவில் நடைபெற உள்ள வாள்சண்டை போட்டியில் கலந்து கொள்ள ஸ்ரீ.சரவணனுக்கு ரூ.1.40 லட்சத்திற்கான காசோலையையும், பன்னாட்டு அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள ஆர். ஷாச்சி சாய்-க்கு ரூ.70 ஆயிரத்திற்கான காசோலையையும், சைக்ளிங் விளையாட்டு வீரர்களான ஸ்ரீநாத் லட்சுமிகாந்த் மற்றும் பி.பிரதீப் ஆகிய இருவருக்கும் மொத்தம் ரூ. 7,38,403/- செலவில் அதிநவீன பந்தைய சைக்கிள்களையும் வழங்கினார்
இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க விருதான அர்ஜூனா விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அபய் சிங் (ஸ்குவாஷ்), துளசிமதி முருகேசன் (பாரா பேட்மிண்டன்), நித்யா ஸ்ரீ சுமதி சிவன் (பாரா பேட்மிண்டன்) மற்றும் மனிஷா ராமதாஸ் (பாரா பேட்மிண்டன்) ஆகியோருக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
மேலும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி மற்றும் தேசிய அளவிலான கையுந்து போட்டி, இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டு கூட்டமைப்பு (SGFI) நடத்திய 68-வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தேசிய கூடைப்பந்து போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டின் 60 வீரர், வீராங்கனைகள் துணை முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.