சென்னை: ‘சென்னையில் 152 ஏக்கர் பரப்பளவில் ஒரு அதிநவீன திரைப்பட நகரத்தை நிறுவுவதை எங்களின் முக்கிய முயற்சியாக கொண்டுள்ளோம்’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னையில் நடைபெற்ற எப்ஐசிசிஐ ஊடக மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு-2025யை தொடங்கி வைத்து பேசியதாவது: ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையைப் பொறுத்தவரை, தமிழ்நாடு சுதந்திரத்திற்கு முன்பிருந்தே சுறுசுறுப்பாகவும், துடிப்பாகவும் எப்போதும் இருந்து வருகின்றது.
நாட்டின் பிற பகுதிகள் பொழுதுபோக்கை பெரும்பாலும் வேடிக்கை மற்றும் மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்தின. நமது திராவிட இயக்கம் சமூக மாற்றத்தையும், சமூக நீதியையும் கொண்டு வருவதற்கு அதை ஒரு சக்திவாய்ந்த கருவியாகப் பயன்படுத்தியது. பொழுதுபோக்கு மூலமாக சமூக சீர்திருத்த கருத்துக்களை எடுத்துச் சொன்ன இயக்கம் திராவிட இயக்கம் மட்டும் தான். புதிய தொழில்நுட்பத்தால் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை இன்று பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு துணை நிற்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. சென்னையில் 152 ஏக்கர் பரப்பளவில் ஒரு அதிநவீன திரைப்பட நகரத்தை நிறுவுவதை எங்களின் முக்கிய முயற்சியாக கொண்டுள்ளோம்.
இந்த உலகத் தரம் வாய்ந்த வசதியில் மேம்பட்ட போஸ்ட் புரேடக்சன் ஸ்டுடியோக்கள், மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பங்கள், அனிமேஷன், விஎப்எக்ஸ் ஸ்டுடியோக்கள், எல்இடி சுவர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுக்கான 5 நட்சத்திர ஓட்டல்கள் கூட இருக்கும். இந்த திட்டம் நமது மாநிலத்தை ஊடக சிறப்பிற்கான ஒரு முக்கிய மையமாக மாற்றுவதை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திறமை வாய்ந்த பணியாளர்கள், செலவு குறைவு மற்றும் ஆதரவான சூழ்நிலைகளால், போஸ்ட்-புரொடக்ஷன், அனிமேஷன், கேமிங், ஏஆர், விஆர் மற்றும் விஎஃப்எக்ஸ் ஆகியவற்றிற்கான உலகளாவிய மையமாக தமிழ்நாடு வேகமாக உருவாகி வருகின்றது. உயர்தர, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை நாடும் சர்வதேச நிறுவனங்களை வரவேற்கின்றோம். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
* மேடையில் கமல் கோரிக்கை உறுதியளித்த உதயநிதி
துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், ‘இங்கே பேசும்போது உலக நாயகன் கமல் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைத்தார். அதாவது நகராட்சி நிர்வாகத்தில் வசதிக்கு வருகின்ற உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியில் இருந்து முழு வரிவிலக்கு வேண்டும் என்று இங்கே வேண்டுகோளை வைத்திருந்தார். உங்களுடைய கோரிக்கையின் முக்கியத்துவம் என்ன என்பது நன்றாக தெரியும். உங்களுடைய கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு நிச்சயம் எடுத்துச் செல்வேன். இதுபற்றி ஆய்வு செய்து சட்ட விதிகளை எல்லாம் ஆராய்ந்து, நீங்கள் எல்லாம் மகிழ்கின்ற வகையில் நிச்சயம் ஒரு அறிவிப்பை வரும் சட்டமன்றத்தில் முதல்வர் நிச்சயம் அறிவிப்பார். அதற்கு நிச்சயமாக உங்களுக்கு துணை நிற்பேன் என்ற உறுதியை இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன். முதல்வர் நிச்சயமாக மிக விரைவில் ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்று நான் உறுதியளிக்கிறேன்’ என்றார்.
The post சென்னையில் அதிநவீன திரைப்பட நகரம் நிறுவுவது எங்களின் முக்கிய முயற்சி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.