கத்திரி வெயிலும்… கால்நடைகளின் பிரச்னைகளும்…

6 hours ago 3

அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது. நமது இயல்பான பணிகளைச் செய்வதற்குக் கூட நாம் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் நமது பிரச்சினைகளை வெளியில் சொல்கிறோம். பாவம் கால்நடைகள், அவை எப்படி வெயிலால் தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வெளியில் சொல்லும்? வெயில் வாட்டி வதைக்கும் இந்தத் தருணத்தில் கால்நடைகளுக்கு இன்னென்ன பிரச்னைகள் வருமென்று கணித்து நாமே சில பராமரிப்புகளை மேற்கொள்வோம்.

ஹீட் ஸ்ட்ரோக்

மனிதர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் வருவது போல கால்நடைகளுக்கு வெயில் காலத்தில் ஏற்படும் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான நோய்களில் ஹீட் ஸ்ட்ரோக்கும் ஒன்று. இது உடலில் வெப்பநிலை கட்டுப்பாட்டை மீறி அதிகமாகும்போது ஏற்படுகிறது. கால்நடைகளுக்கு சுவாசக் கோளாறு, சோர்வு, உணவு விருப்பக் குறைவு போன்ற அறிகுறிகள் காணப்படும். இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் உயிருக்கே உலை வைத்துவிடும்.

நீரிழிவு

வெயில் காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் அதிகமாக இழக்கப்படும். இதனால் கால்நடைகள் பலவீனமாகி எடைக்குறைவு, வாய் உலர்தல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளால் அவதிப்படும்.

கால் கிழிந்து அழுகும் நோய்

வெயில் தாங்காமல் கால்நடைகள் சுத்தமற்ற நீரில் இறங்கிவிடும். கால்நடைகளின் கால்கள் ஈரமாவதோடு, சுத்தமில்லாத தண்ணீரில் இருக்கும் கிருமிகள் பெருகி கால்களில் இருக்கும் புண்ணில் படிந்து கால்களை அழுகிய நிலைக்குக் கொண்டுசென்று விடும். இதனால் கால்களில் வீக்கம், காயம் மற்றும் நடப்பதில் சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

தீவனக் கோளாறுகள்

வெயில் காரணமாக கால்நடைகளுக்கு திட உணவுகளை அதிகம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தகூடும். இது உடலில் சோர்வை உண்டாக்கலாம். தவறான தீவன முறை மற்றும் நீரின்றி இருப்பது இவை அனைத்திற்கும் காரணமாகின்றன.

கிருமி மற்றும் பரவல் நோய்கள்

வெயில் காலங்களில் ஈ, கொசு போன்றவை அதிகம் பரவுவதால், அவை மூலமாக பல நோய்கள் பரவலாம். குறிப்பாக பூச்சிக் காய்ச்சல் போன்றவை ஆடுகள் மற்றும் பசுக்களை அதிகமாக தாக்கும்.
இந்தப் பிரச்னைகளை சில எளிய பராமரிப்பு முறைகளைச் செய்தாலே கட்டுப்படுத்திவிடலாம். ஆடு, மாடு, பன்றி போன்ற கால்நடைகளை குளிர்ச்சியான, நிழலான இடங்களில் வைத்து வளர்க்க வேண்டும். தினமும் கால்நடைகளுக்கு போதிய அளவு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். இதுபோக சரியான தீவன முறையைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை வழங்க வேண்டும். கால்நடைகளை அடைக்கும் கொட்டகைகளை சுத்தமாகவும் காற்றோட்டத்துடனும் வைக்க வேண்டும். கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் பராமரிப்பு சிகிச்சைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.

 

The post கத்திரி வெயிலும்… கால்நடைகளின் பிரச்னைகளும்… appeared first on Dinakaran.

Read Entire Article