சென்னையில் 331 தாழ்தள பேருந்துகள் இயக்கம்: மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்

1 week ago 3

சென்னை: சென்னையில் இதுவரை 331 தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு வரை தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் வகையில் இருந்தன. ஆனால், 2018ம் ஆண்டுக்கு பிறகு தாழ்தள சொகுசு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தாழ்தள சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் மீண்டும் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த பேருந்துகளில், இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ குறைத்து பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

புதிய தாழ்தள சொகுசு பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் சிரமம் இன்றி பேருந்துகளில் ஏறும் விதமாக இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதற்கட்டமாக 58 தாழ்தள பேருந்துகள் இயக்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பல கட்டங்களாக இதுவரை 331 தாழ்தள பேருந்துகள் சென்னை மாநகரில் இயக்கப்பட்டு வருவதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

The post சென்னையில் 331 தாழ்தள பேருந்துகள் இயக்கம்: மாநகர் போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article