
சென்னை,
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை தமிழக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தொடங்கி விட்டன. சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக.-பாஜக கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. மேலும் கட்சி பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று பூத் (பாகம்) கிளைகள் அமைக்கப்பட்டு வருவது குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் (பாகம்) கிளைகள் அமைக்கப்பட்டு வருவது குறித்த விபரங்களைக் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார். மேலும், இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.