சென்னைக்கு எதிரான வெற்றிக்குப்பின் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியது என்ன..?

4 hours ago 3

சென்னை,

ஐ.பி.எல். தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாம் கர்ரன் 88 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 'ஹாட்ரிக்' உட்பட 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்குபின் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில், "எந்த மைதானத்திலும் இலக்கை துரத்துவதை நான் விரும்புகிறேன். சேசிங் என்றாலே எப்பொழுதும் எனக்கு பிடித்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக இதுபோன்ற பெரிய இலக்கை எதிர்த்து சேசிங் செய்யும்போது உத்வேகம் மிகவும் முக்கியம். அந்த வகையிலேயே எங்களது அணியின் பேட்ஸ்மேன் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நான் உள்ளூர், வெளியூர் என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. நான் ஒரே அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறேன்.

சில நேரங்களில் அது வேலை செய்யலாம் செய்யாமலும் போகலாம். என்னால் முடிந்த வரை அணிக்கு பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதை மட்டுமே நினைத்து எனது பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறேன். தற்போது நான் நல்ல பார்மில் உள்ளதால் எப்படிப்பட்ட இலக்கையும் எட்ட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டியில் எங்களது அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா ஆகியோர் கொடுத்த தொடக்கம் சேசிங்கை மிகச்சிறப்பாக அணுக உதவியது.

அவர்கள் இருவருமே மிகச்சிறப்பான பார்மை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் பின்னால் வரும் எங்களாலும் போட்டிகளை வெற்றிகரமாக முடிக்க முடிகிறது. எங்களுடைய அணி தற்போது மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இனியும் எங்களது இந்த வெற்றி தொடரும்" என்று கூறினார். 

Read Entire Article