
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் 167 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிவம் துபே 43 ரன்களுடனும் (37 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), தோனி 26 ரன்களுடனும் (11 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.
சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்றிருந்த சென்னை அணி ஒரு வழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது. லக்னோவுக்கு இது 3-வது தோல்வியாகும்.
இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில், "இந்த ஆட்டத்தில் நாங்கள் 10 - 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். ரன் அடிக்க வேண்டும் என்ற வேகம் எங்களுடன் இருந்தபோது நாங்கள் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். நாங்கள் பார்ட்னர்ஷிப்கள் தொடர்ந்து அமைக்க வேண்டியிருந்தது. ஆனால் நாங்கள் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் நன்றாக உணர்கிறேன். மெல்ல மெல்ல பார்முக்கு திரும்பி வருகிறேன். ஒவ்வொரு போட்டியையும் ஒரு நேரத்தில் எடுத்துக்கொள்கிறேன். நாங்கள் நிறைய வீரர்களுடன் விவாதித்தோம். ஆனால் பிஷ்னோயை இறுதி கட்டத்தில் பந்துவீச வைக்க முடியவில்லை.
பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததாலே பின்னடைவை சந்தித்தோம். இருந்தாலும் ஒரு அணியாக ஒவ்வொரு ஆட்டத்திலிருந்தும் நேர்மறையானவற்றைப் பெற நாங்கள் பார்க்கிறோம். மேலும் அதனை நாங்கள் மேம்படுத்த முயற்சிக்கிறோம்" என்று கூறினார்.