சென்னை விமானநிலையத்தில் பார்க்கிங் கட்டணம் இன்று முதல் திடீர் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

16 hours ago 1

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் உள்ள மல்டிலெவல் பார்க்கிங் பகுதியில் இன்று முதல் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகளும் வாடகை வாகன ஓட்டுநர்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.  சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022ம் ஆண்டு, டிசம்பர் 4ம் தேதி மல்டிலெவல் அடுக்குமாடி கார் பார்க்கிங் பகுதி செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே இருந்த வாகன பார்க்கிங் கட்டணத்தை அதிகமாக உயர்த்தி நிர்ணயம் செய்திருந்தனர். இந்த கட்டண உயர்வுடன், இதுவரை மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி, வெளியே எடுத்து வருவதில் வாகன ஓட்டிகளும் விமான பயணிகளும் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். ஏனெனில், அதற்கான வழிகள் தெளிவாக இல்லை என்று பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடையே கடும் அதிருப்தி நிலவியது.

இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று முதல் விமான நிலைய மல்டிலெவல் பார்க்கிங் பகுதியில் வாகனங்களுக்கான கட்டணம் திடீரென மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுவரை கார்களுக்கு குறைந்தபட்சம் அரைமணி நேர கட்டணமாக ரூ.80 ஆக இருந்தது, தற்போது ரூ.85 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதுவரை அதிகபட்சம் 24 மணி நேரத்துக்கு ரூ.525 ஆக இருந்தது, தற்போது ரூ.550 ஆக அதிகரித்துள்ளது. டெம்போ வேன்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.315 ஆக இருந்தது, தற்போது ரூ.330 ஆக அதிகரித்துள்ளது. இத்தகயை வாகனங்களுக்கு 24 மணி நேர கட்டணம் ரூ.1,050 ஆக இருந்தது, தற்போது ரூ.1,110 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பஸ், லாரிகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.630 ஆக இருந்தது, தற்போது ரூ.660 ஆக அதிகரித்துள்ளது. இவற்றுக்கு 24 மணி நேர கட்டணமாக ரூ.2,100 ஆக இருந்தது, தற்போது ரூ.2,205 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் இருசக்கர வாகனங்களும் பார்க்கிங் கட்டண உயர்வில் தப்பவில்லை. அரைமணியில் இருந்து ஒரு மணி நேர கட்டணமாக இதுவரை ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எனினும், ஒரு மணியில் இருந்து 2 மணி நேர கட்டணமாக ஏற்கெனவே ரூ.30 வசூலிக்கப்பட்டது, தற்போது ரூ.35 ஆக அதிகரித்துள்ளது. முன்பு 24 மணி நேர கட்டணம் ரூ.95 வசூலிக்கப்பட்டது. இப்போது அக்கட்டணம் ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, சென்னை விமானநிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பயணிகளுக்கான வாகனங்கள், பிக்-அப் பாயிண்ட் திடீரென மாற்றப்பட்டு, ஒரு கிமீ தூரத்தில் உள்ள மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதியின் 2வது தளத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கும் எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை. அதேபோல், வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இன்று உயர்த்தப்பட்டதற்கு பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடையே கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் நிலவி வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு, டிசம்பர் 4ம் தேதி அதிகாலையில் இருந்து ஏற்கெனவே இருந்த பார்க்கிங் கட்டணம் அமலுக்கு வந்தது. இந்த வசூலை தனியார் நிறுவனம் மேற்கொண்டது.

இந்நிறுவனத்திடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை ஒப்படைக்கும்போதே, 2 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கிங் கட்டணத்தை சிறிதளவு உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில்தான், இன்று முதல் விமானநிலைய பார்க்கிங் கட்டணம் சிறிதளவு உயர்த்தப்படுகிறது. இம்மாற்றம் குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தற்போது முன்னறிவிப்பின்றி பார்க்கிங் கட்டண உயர்வு என்பது சரியல்ல என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சென்னை விமானநிலையத்தில் பார்க்கிங் கட்டணம் இன்று முதல் திடீர் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article