சென்னை விமான நிலையத்தில் பாழடைந்த உள்கட்டமைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்:ஒன்றிய அமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்பி கடிதம்

4 days ago 2

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பாழடைந்த உள்கட்டமைப்புகளை உடனே சரிசெய்ய வேண்டும் என ஒன்றிய அமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடுவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்:
ஒன்றிய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சென்னை விமான நிலையத்தின் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளை விமான நிலைய கவுன்சில் இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டி உள்ளது. அதனை தொடர்ந்து, திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். சென்னை விமான நிலை யம், உலகளவில் 56வது இடத்திலிருந்து 63வது இடத்திற்கு சரிந்துள்ளது. பெங்களூரு, மங்களூருவில் உள்ள தனியார் விமான நிலையங்கள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், மும்பை, டெல்லி விமான நிலையங்கள் அதிக பயணிகள் நடமாட்டம் உள்ள மையங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன.

சென்னை விமான நிலையம் உள்கட்டமைப்பு மற்றும் பயணிகள் சேவை தரத்தில் கணிசமாக பின்தங்கியுள்ளது. அடிக்கடி பயணிப்பவர்களிடமிருந்து கிடைத்த கருத்துகளின் அடிப்படையில், நெரிசலான ஓய்வறைகள், தூங்கும் அறைகள், அசுத்தமான கழிவறைகளால் சுத்தத்தின் தர அளவு 2023ல் 4.90ல் இருந்து 2024ல் 4.71 ஆக சரிந்துள்ளது. மிக குறைந்த மதிப்பீடு (4.64) கொண்ட தரமற்ற உணவு வசதிகள், போதுமான வரவேற்பு வசதி இல்லாமை, தெளிவற்ற திசைக் குறியீடுகள், தரமற்ற வைபை வசதி, உள்ளூர் சிம் கார்டு இல்லாத வெளிநாட்டு பயணிகளுக்கு ஓடிபி பெறுவதில் சிரமம். விமான நிலையத்திலிருந்து வரும் பயணிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் இல்லாததால் வாகனங்களை அணுகுவதில் சிக்கல்என விமான நிலையம் தொடர்ந்து மோசமான உள்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்கல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது.

பெருநகரமாகவும், சர்வதேச அளவில் முக்கிய நகரமாவும் வளர்ந்து வரும் சென்னையின் பொருளாதார மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படவில்லை. உடனடியாக நிலுவையில் உள்ள மேம்பாடுகளை விரைவு படுத்த இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு (ஏஏஐ) ஒன்றிய அமைச்சகம் உத்தரவிட வேண்டும்.

சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிலை நம் சர்வதேச புகழை குறைப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மோசமான அனுபவத்தையும் தந்து வருகிறது. சென்னைக்கு உரிய உலகத்தரம் வாய்ந்த விமான நிலைய உள்கட்டமைப்பு கிடைப்பதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம். எனவே, சென்னை விமான நிலையத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பயணிகளின் வசதிகளில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை சரிசெய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

The post சென்னை விமான நிலையத்தில் பாழடைந்த உள்கட்டமைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்:ஒன்றிய அமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்பி கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article