சென்னை: சென்னை விஐடி பல்கலைக்கழக தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு விஐடியின் நிறுவனரும், வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடியின் துணை தலைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலிய துணை தூதரக அதிகாரி கேத்ரினா நேப், டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரி (நியமிக்கபட்ட) சுதீப் குன்னுமால் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை விஐடியின் இணை துணைவேந்தர் டி.தியாகராஜன் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
சிறப்பு விருந்தினர் கேத்ரினா நேப் பேசுகையில், “இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கல்வியில் வலுவான தொடர்பை கொண்டுள்ளன. இதற்காக இரு நாட்டு அரசுகளும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி பயில வருகின்றனர். தற்போது, 1 லட்சம் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருக்கின்றனர்” என்றார்.
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, “இந்தியாவில் உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதம் 28 சதவிகிதம். ஆனால், பல நாடுகளில் 70 முதல் 80 சதவிகிதமாக உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவில் 100 சதவிகிதமாக உள்ளது. அந்த நாடுகள் எவ்வாறு உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்று நாம் கற்க வேண்டும். அந்நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதத்துக்கும் அதிகமாக கல்விக்காக செலவு செய்கின்றனர்.
இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதத்துக்கு அதிகமாக கல்விக்காக செலவு செய்ய வேண்டும் என்று 60 ஆண்டுகளாக விரும்புகிறோம். நடப்பு நிதியாண்டில் ரூ.50 லட்சம் கோடி நிதிநிலை அறிக்கையில் 2.5 சதவிகிதம் மட்டும் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதனையடுத்து, வகுப்பில் சிறந்து விளங்கிய மாணவ – மாணவிகள் விருதுகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில், சென்னை வி.ஐ.டியின் கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், பேராசிரியர்கள், ஏராளமான மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழக தின விழா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6% செலவிட வேண்டும்: விஸ்வநாதன் கோரிக்கை appeared first on Dinakaran.