சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜனை வீட்டிற்குள் வைத்து பூட்டிய குழந்தைகள் நல டாக்டரை போலீசார் கைது செய்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வராக டாக்டர் தேரணி ராஜன் பணியாற்றி வருகிறார். இவர் எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனை எதிரே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த வாரம் தேரணிராஜன் தனது வீட்டில் இருந்த போது அவரது வீட்டின் கேட்டை மர்ம நபர் ஒருவர் சங்கிலியால் பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
இதனால், தேரணிராஜனால் வெளியே வரமுடியவில்லை. இதையடுத்து குடியிருப்பில் உள்ள செக்யூரிட்டி உதவியுடன் சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பூட்டை உடைத்து டாக்டர் தேரணிராஜனை மீட்டனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார், சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள் நல டாக்டர் செந்தில்குமார் என தெரியவந்தது.
இவரை தேரணிராஜன் பணி நீக்கம் செய்ததால், அவரை பழிவாங்கும் நோக்கில் இதேபோன்று முதல்வர் தேரணிராஜன் வீட்டை 2 முறை பூட்டிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும், டாக்டர் செந்தில் குமார் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் போலீசார் புகாரின் படி டாக்டர் செந்தில்குமாரை கைது செய்தனர். பிறகு அவரை மருத்துவ சிகிச்சைக்காக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜனை அவரை வீட்டிற்குள் டாக்டர் ஒருவர் பூட்டிய சம்பவம் டாக்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜனை வீட்டுக்குள் வைத்து பூட்டிய டாக்டர் கைது: மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.