சென்னை மெரினாவில் இன்று இரவு 8 மணிக்கு மேல் போக்குவரத்துக்கு தடை

2 days ago 2

சென்னை,

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடைபெறும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் ஆலோசனையின் பேரில் இணை மற்றும் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் இன்றும், நாளையும் 19 ஆயிரம் போலீசாரும், 1,500 ஊர்காவல் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

425 இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொள்ள உள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக 30 கண்காணிப்பு சோதனை குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர். டிரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுக்கள் வெடிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

புத்தாண்டை கொண்டாடுவதற்கு மெரினா காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என்பதால் கடற்கரை உட்புற சாலை இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படும் என்றும், காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை 6 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். அதே போன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையிலும் போக்குவரத்துக்கு தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை வழியாகவும், பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகவும் மாற்றுப்பாதையில் செல்லலாம். வாலாஜா சந்திப்பில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து வடக்கு நோக்கி வரும் மாநகர பஸ்கள் ஆர்.கே. மடம் சாலையில் யூ டர்ன் அடித்து செல்லலாம் என்றும், வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வரும் மாநகர பஸ்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் வடபகுதி நோக்கி திருப்பி விடப்படும் என்றும், சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் இன்றிரவு 10 மணி முதல் 1-ந்தேதி அன்று 6 மணி வரை மூடப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட வருவோர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு 17 இடங்களை போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். அதிவேகமாக ஆபத்தான முறையில் வாகன ஓட்டுதல், மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களை ஏ.என்.பி.ஆர். எனப்படும் நவீன கேமரா மூலமாக தானாகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் போலீசார் மற்றும் இதர துறைகளில் முறையான அனுமதி பெற வேண்டும். இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கி 2025 புத்தாண்டை இனிதாக வரவேற்றிட சென்னை போலீஸ்துறை சார்பில் அன்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

Read Entire Article