சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க முதியோருக்கு நாளை முதல் இலவச பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்குக் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இச்சேவைகளை பெற விரும்பும் மூத்த குடிமக்கள் தங்கள் இருப்பிட சான்றாகக் குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அடையாறு, எம்கேபி நகர், பாடியநல்லூர், குன்றத்தூர், அயனாவரம், வடபழனி உள்ளிட்ட மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை, பேருந்து நிலையம் என 40 இடங்களில் நாளை முதல் ஜூலை 31 வரை டோக்கன்கள் வழங்கப்படும். மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன் வீதம் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும்.
காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை புதுப்பித்தல், புதிய பயனாளிகள் தொடர்பான பணிகள் நடைபெறும். கோயம்பேடு, கிளாம்பாக்கம், சென்ட்ரல், தாம்பரம், பூந்தமல்லி உட்பட 40 இடங்களில் டோக்கன்கள் தரப்படும் என போக்குவரத்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
The post சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க முதியோருக்கு நாளை முதல் இலவச பேருந்து பயண டோக்கன்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.