சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். முகமதுசமீர் என்பவர் லீடர் கேப்பிட்டல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியில் நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார். இவர் Kay Am Industrial Business P Ltd, நிறுவனத்துடன் வியாபாரம் சம்மந்தமாக ஒப்பந்தம் போட்டு ஜெய்கணேஷ் என்பவர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஜெய்கணேஷ் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்ட போது நஷ்டம் அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆத்திரம் அடைந்த ஜெய்கணேஷ் கடந்த 2003ம் செப்டம்பர் 13ம் தேதி பாலமுரளி, கோபி, முருகன் (எ) பொய்யா முருகன், ஜான்சன், கணேசன் (எ) காட்டான் கணேசன், சண்முகம் (எ) சண்முக வடிவேல், கோகுல், ஜனார்த்தனன் ஆகியோர் கூட்டு சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் முகமது சமீர் நிறுவனத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களை மிரட்டியும், மேலாளர் மற்றும் கணக்காளரை தாக்கியும், நிரப்பப்படாத ஏழு காசோலைகளில் கையெழுத்து வாங்கி அதில் ₹41,80,000க்கு நிரப்பப்பட்டு அதை வைத்து முகமது சமீரை மிரட்டியுள்ளனர். இதையடுத்து வியாபாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2003ம் ஆண்டு கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்னர். இவ்வழக்கானது சென்னை மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு மாற்றப்பட்டு, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவில் 2003ம் ஆண்டு மறுவழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணையில் குற்றவாளிகளான கோகுல், ஜனார்த்தனன் தலைமறைவாக இருந்ததால், நீதிமன்றத்தில் இரண்டு பேருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி முதல் 8 மற்றும் 9வது குற்றவாளிகளுக்கு பிடியாணை நிறைவேற்ற வேண்டி வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் 17 வருடங்களாக தலைமறைவாக இருந்தவர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் 8வது நபரான கோகுல் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு இறந்து விட்டார் என தனிப்படையினருக்கு தெரியவந்தது. மேலும் தலைமறைவாகி இருந்த எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜனார்த்தன் (70) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டது. தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரை பாராட்டினார். 17 வருடங்களாக தலை மறைவாக இருந்து வந்த ஜனார்த்தன் என்பவரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் வெகுவாக பாராட்டினார்.
The post சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது: நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றம் appeared first on Dinakaran.