
சென்னை பெருங்குடி ரெயில் நிலையத்திற்கு அருகே சதாசிவம் பிரதான சாலை உள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில், இந்த பிரதான சாலையில் இன்று திடீரென விரிசல் ஏற்பட்டது. சாலையில் 100 அடிக்குமேல் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைக்கு அருகே இன்று தனியார் நிறுவன கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியின்போது கனரக எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அப்போது, கனரக கட்டுமான எந்திரம் பயன்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட அதிர்வால் அருகே உள்ள சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாலையில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.