
புலவாயோ,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் தென்ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.
கேஷவ் மகராஜ் விலகிய சூழலில் கேப்டன் பொறுப்பை ஏற்ற முல்டர் முதல் போட்டியிலேயே முச்சதம் அடித்து அசத்தினார். அதன்பின்னும் ஓயாத அவர் அதிரடியாக விளையாட தொடங்கினார். இதனால் மளமளவென ரன் குவித்த அவர் 350 ரன்களை கடந்து அசத்தினார். இதனால் டெஸ்ட் போட்டியில் தனிநபர் அதிகபட்ச ரன் அடித்த பிரையன் லாராவின் (400 ரன்கள்) சாதனையை வியான் முல்டர் முறியடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 367 ரன்களில் இருந்தபோது உணவு இடைவேளை விடப்பட்டது.
இடைவேளை முடிந்து அவர் தொடர்ந்து பேட்டிங் செய்து லாராவின் சாதனையை முறியடிப்பார் என பலரும் பேச தொடங்கினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தென் ஆப்பிரிக்க அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால் பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனை தப்பியது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 114 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. வியான் முல்டர் 367 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.
இந்த நிலையில், 2-ம் நாள் ஆட்டம் முடிவடைந்த பின்னர், 367 ரன்னில் இருந்தபோது டிக்ளேர் செய்தது குறித்தும், லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன்? என்பது குறித்தும் முல்டரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது;
"'அணியின் நலன் கருதியே டிக்ளேர் செய்தோம். 2-வதாக, பிரையன் லாரா உண்மையிலேயே ஒரு ஜாம்பவான். அவர் இங்கிலாந்துக்கு எதிராக 400 ரன்கள் குவித்தார். அந்த சிறப்பு வாய்ந்த சாதனை அவரிடம் தொடர்ந்து இருக்கட்டும். மீண்டும் ஒரு முறை இதே போன்று வாய்ப்பு கிடைத்தாலும் அனேகமாக இதைத் தான் செய்வேன். பயிற்சியாளர் சுக்ரி கான்ட்ராட்டும், ஜாம்பவான்கள் தொடர்ந்து பெரிய ஸ்கோருடன் இருக்கட்டும் என்று கூறினார்'
இவ்வாறு அவர் கூறினார்.