
சென்னை,
சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு சாப்பிட வந்த ஒரு குடும்பத்தினர் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, கடையின் ஊழியர் கொண்டு வந்த மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றுள்ளனர்.அதில், முழு தேரை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்தது. இதனைக் கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் கேட்ட போது, அவர்கள் சரியான பதிலளிக்காமல் மழுப்பியுள்ளனர்.
இதையடுத்து, தேரை கிடந்த உணவை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், உணவில் தேரை கிடந்த ஓட்டலுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.