ஐபிஎல்: லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

5 hours ago 2

தர்மசாலா,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 53 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் தர்மசாலாவில் இன்று நடைபெற்று வரும் 54வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து பஞ்சாப்பின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா 1 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் புகுந்த இங்கிலிஸ் 30 ரன், ஸ்ரேயாஸ் ஐயர் 45, நேஹல் வதேரா 16 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து ஷஷாங் சிங் களம் புகுந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்சிம்ரன் சிங் 91 ரன் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 91 ரன்கள் எடுத்தார். லக்னோ தரப்பில் ஆகாஷ் சிங், திக்வேஷ் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் ரன் ஏதுமின்றி அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் (13), அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் (6), கேப்டன் ரிஷப் பந்த் (18) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் ஆயுஷ் பதோனி தனி ஆளாக நின்று அணியின் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு பக்கபலமாக மறுமுனையில் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 74 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.  

Read Entire Article