சென்னை: சென்னை புத்தகக் காட்சிக்கு 20 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 48வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கப்பட்டது. மொத்தம் 900 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகக் காட்சி வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. இதற்கு நுழைவுக் கட்டணமாக பொதுமக்களுக்கு ரூ.10 மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசமாக இருந்தது. தொடர்ந்த 17 நாட்கள் நடைபெற்று வந்த புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவுபெற்றது. இதில் மொத்தம் 20 லட்சம் வாசகர்கள் வருகை தந்தாகவும், சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை நடைபெற்றது என பபாசி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பபாசி வெளியிட்டுள்ள அறிக்கை: 48வது சென்னைப் புத்தகக் காட்சி கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெற்றது. இந்த புத்தகக்காட்சிக்கு 20 லட்சம் வாசகர்கள் வருகை தந்தார்கள். சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை நடைபெற்றது. புத்தகக்காட்சியின் நிறைவு நாள் நிகழ்வில் புத்தகக் காட்சி நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து உதவி புரிந்த கொடையாளர்கள், நிறுவனங்களை சென்னை உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பாராட்டி கவுரவித்தார். மேலும் பதிப்புத் துறையில் நூற்றாண்டு , பொன்விழா, வெள்ளிவிழா கண்ட பதிப்பாளர்களையும் பாராட்டி சிறப்பு செய்தார். மேலும் புத்தகப் பூங்காவை அமைத்து தரவேண்டும் என துணை முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
The post சென்னை புத்தகக் காட்சி நிறைவு 20 லட்சம் வாசகர்கள் வருகை: பபாசி தகவல் appeared first on Dinakaran.