புதுடெல்லி: மக்களவையில் திமுக எம்பி கனிமொழி நேற்று,‘‘சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை எதிர்கொள்ள, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக பழைய ஜனதா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்துவதன் மூலம், தற்போதுள்ள முத்துநகர் எக்ஸ்பிரஸில் கூட்ட நெரிசலை குறைக்க ஒன்றிய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா ? மேலும் தூத்துக்குடியிலிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் இணைப்பு ரயில்களை மீண்டும் இயக்க திட்டமுள்ளதா? அதேபோன்று சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,‘‘சென்னை தூத்துக்குடி இடையே தற்போது 12693/12694 சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்து நகர் எக்ஸ்பிரஸ் தினசரி சேவை இயக்கப்படுகிறது. மேலும், பயணிகளின் வசதிக்காக, இணைப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதாவது. 56724/56723 வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி பயணிகள் ரயில் 16127/16128 சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று 56725/56726 தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில் 22667/22668 நாகர்கோவில் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரசுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவைத்தவிர தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது என்பது புதிய ரயில்களுக்கான போக்குவரத்து தேவை உள்ளிட்ட வளங்கள் கிடைக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து ரயில்வேயின் செயல் திட்டத்தில் இடம்பெறும் என்றார்.
The post சென்னை – தூத்துக்குடி இடையே வந்தே பாரத் இயக்கப்படுமா..? மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி appeared first on Dinakaran.