சென்னை: தடாவில் சென்னை துறைமுகத்துக்கு வந்த கண்டெய்னர் லாரியில் இருந்த ஏசி பெட்டிகள் திருடப்பட்டுள்ளது. திட்டம் போட்டு 111 ஏசி பெட்டிகளை திருடிய 6 பேர் கொண்ட ஓட்டுனர் கும்பலை போலீஸ் கைது செய்தது.
சென்னை எர்ணாவூர் மணலி விரைவு சாலை பகுதியை சேர்ந்தவர் சபரி. இவர் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் டிரான்ஸ்போர்ட் மூலம் ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து 160 ஏசி சாதனங்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றி சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து சென்னை துறைமுகத்திலிருந்து கொல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொல்கத்தா சென்ற கண்டெய்னர் லாரி பெட்டியை திறந்து பார்த்தபோது 160 ஏசி பெட்டிகளில், 111 பெட்டிகள் காணவில்லை என்பது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஏசி நிறுவனத்தினர் உடனடியாக எண்ணூரில் உள்ள சபரி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் சபரி எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு லாரியின் ஜிபிஎஸ் கருவியை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போதுதிருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நெடுமாறன் மற்றும் இளமாறன், திருவொற்றியூர் சத்யமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள இருவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள், ஏசி சாதனங்களை மணலி புதுநகருக்கு கொண்டு சென்று, பின்னர் அங்கிருந்து கோடம்பாக்கத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே ரூ.45,000 மதிப்புள்ள ஏசியை ரூ.25,000க்கு வீரப்பனை செய்தது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.18.75 லட்சம் ரொக்கம், 15 ஏசி பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post சென்னை துறைமுகத்துக்கு வந்த கண்டெய்னர் லாரியில் இருந்த ஏசி சாதனங்களை திருடி விற்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது appeared first on Dinakaran.