திரிபோலி: லிபியாவில் 3 அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் பதவி விலகக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியில் போராளிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தனர். பிரபல மிலிஷியா தலைவர் அப்துல்கானி கிக்லி கொல்லப்பட்டார். அதனால் லிபியா தலைநகர் திரிபோலியில் நூற்றுக்கணக்கான மக்கள், பிரதமர் அப்துல்ஹமீத் துபைபா பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக, பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் முகமது அல்-ஹவிஜ், உள்ளாட்சி அமைச்சர் பத்ர் எத்தின் அல்-தூமி, வீட்டுவசதி அமைச்சர் அபு பக்ர் அல்-கவி ஆகிய மூன்று அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது, பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்கள், லிபியாவில் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் போராளிக் குழுக்களின் செல்வாக்கை கட்டுப்படுத்த பிரதமர் துபைபா தவறிவிட்டார் என்ற பொதுமக்களின் அதிருப்தியை பிரதிபலிக்கின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘பிரதமர் துபைபாவுக்கு எதிராகவும், பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து தேர்தல்களை தடுப்பவர்களுக்கு எதிராகவும் எங்களது கோபத்தை வெளிப்படுத்த கூடியுள்ளோம்’ என்றனர். இதற்கிடையில், இந்த மோதல்களால் லிபியாவின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்று பொறியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் அந்நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடையலாம் என்று அஞ்சப்படுகிறது.
The post 3 அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் பிரதமர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்: லிபியா நாட்டில் பதற்றம் appeared first on Dinakaran.