சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை நடத்த டியுசிஎஸ் மூலம் நாளை டெண்டர் விட ஏற்பாடு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

3 weeks ago 3

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை என்று சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் வாதிடும்போது, தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் இருந்து கூட்டுறவு சங்கத்திடம் மாற்றியுள்ளோம் என்று கூறி கூட்டுறவு சங்கத்தின் இணை பதிவாளர் முருகானந்தம் தரப்பில் மனுவை தாக்கல் செய்தார். அதில், தீவுத்திடலில் 50 பட்டாசுக்கடை அமைக்க திட்டமிட்டிருப்பது.

46 கடைகள் பட்டாசு விற்பனையாளர்களுக்கும் மீதமுள்ள 4 கடைகள் கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்க உள்ளோம். இதுதொடர்பாக வரும் அக்டோபர் 24ம் தேதி மாலை 3 மணிக்கு தீவுத்திடலில் கடைகள் ஏலம் விடப்படும். அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படும். இதற்காக தீவுத்திடல் வளாகத்திற்கு வாடகையாக 82 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு டியுசிஎஸ் செலுத்த வேண்டி உள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.

இதன் பின்னர் மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆஜராகி, மின்சாரம், தீயணைப்பு வசதிகள், கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தீவுத்திடலில் பட்டாசுக் கடை அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.

The post சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை நடத்த டியுசிஎஸ் மூலம் நாளை டெண்டர் விட ஏற்பாடு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article