சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது வக்பு சட்ட முன்வடிவை முழுமையாக திரும்ப பெற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் ஆர்.அப்துல் கரீம் தலைமையில் மாநிலப் பொருளாளர் ஏ.இப்ராஹிம், துணைத்தலைவர் கே.தாவூத் கைசர், துணை பொதுச்செயலாளர் ஏ.கே.அப்துல் ரஹீம், மாநில செயலாளர் அன்சாரி ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ள வக்பு திருத்த முன்வடிவினை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அரசினர் தனி தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். மேலும் சந்திப்பின் போது, முன்னாள் முதல்வர் கலைஞர் சிறுபான்மையினருக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்கினார். 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று நீண்ட வருடங்களாக இஸ்லாமிய சமுதாயம் கோரிக்கை வைத்து வருகிறது.
தங்களுடைய ஆட்சிக் காலத்திலேயே இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக்கத்தின் தலைவர் துறைமுகம் காஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
The post சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு: வக்பு சட்டம் தொடர்பான தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தனர் appeared first on Dinakaran.