தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ராணுவ வீரரின் நகைப்பையை திருடிய ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் மவுலீஸ்வரன். ராணுவ வீரரான இவர், பஞ்சாபில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இவரும், இவரது மனைவியும் சொந்த ஊருக்கு செல்ல டொரண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பி1 ஏசி கோச்சில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். அப்போது, 7 சவரன் தங்க நகை, பணம் வைத்திருந்த பையை மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளனர். சிறிதுதூரம் சென்றபிறகுதான் நகை வைத்திருந்த பை நினைவுக்கு வந்துள்ளது. இதனால் ரயிலில் ஏறி பையை பார்த்தபோது மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மவுலீஸ்வரன் சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து ரயிலில் சோதனை நடத்தினர். இதையடுத்து சந்தேகத்தின்பேரில் ரயிலில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது, விக்கிகுமார் (23), ஹரிஸ்குமார் (24) என்பதும், ரயில் பயணிகளுக்கு பெட்ஷீட், தலகாணி கொடுக்கும் வேலை பார்த்து வருவதும், பெட்ஷீட் தலைகாணியை எடுக்க வந்தபோது பி1 பெட்டியில் இருந்த ராணுவ வீரரின் பையை திருடியதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து பை பறிமுதல் செய்யப்பட்டது. இதை யடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகை பையை மீட்டு கொடுத்த போலீசாருக்கு ராணுவ வீரர் மவுலீஸ்வரன் நன்றி கூறினார். இந்த சம்பவம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post சென்னை சென்ட்ரல் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ராணுவ வீரரின் நகைப்பை திருட்டு: பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.